×

அரசு டாஸ்மாக் கடைகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல் மதுபான பாட்டில்கள் விற்பனை குடிமகன்கள் கவலை

க.பரமத்தி, ஜன. 7: அரசு டாஸ்மாக் மதுக்கடையில் மதுபான வகைகளுக்கு தயாரிப்பு தேதியை குறிப்பிட்ட நிறுவனங்கள் அதன் காலாவதி தேதியை குறிப்பிடாமல் மதுவகைகளை விற்பதாக குடிமகன்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரசு மதுபான கடைகளில் விஸ்கி, எம்.சி, பிராந்தி வகைகளும், டிரிபிள் எக்ஸ், ஓல்டு மங்க் ரம் வகைகள் பீர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான மது வகைகளை 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யும் நிறுவங்களின் பொறுப்பு அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களுக்கு அதிக கமிஷன் தரும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர். அப்போது குறிப்பிட்ட பெரிய தொகை கிடைப்பதாக குடிமகன்களிடையே கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் சரக்குகளில் ஒரு குவார்ட்டரில் ஆல்கஹால் 42.8 சதவீதமும், பீர் வகைகளுக்கு 6 முதல் 8 சதவீதம் என்ற விகிதத்தில் மது வகைகளை தயாரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர உண்மையில் தரம் இருப்பதில்லையென்று குடிமகன்களிடையே சந்தேகம் நீண்ட நாளாக எழுந்துள்ளது.

அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் ஒரு குவாட்டர் மது பாட்டிலின் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கரில் குறிப்பிட்ட மதுபான வகைகளில் பேட்ச் நம்பர், தயாரிப்பு தேதி, விலை நிர்ணயம், நிறுவனத்தின் பெயர் போன்ற விபரங்களை அனைத்து மது வகைகளுக்கும் அச்சிடப்பட்ட லேபிள் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட காலாவதி தேதி இல்லை. பொதுவாக தயாரிக்கப்பட்ட எந்த பொருளுக்கும் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் மது பான வகைகளுக்கு மட்டும் காலாவதி தேதி குறிப்பிடாமல் உள்ளதை உணவு வழங்கல் பாதுகாப்பு துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பது மக்களிடையே வேதனையை ஏற்படுத்துவதாக குடிமகன்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறுகையில் சில மது வகைகளை குடிக்கும் போது தலைவலி, வயிறு எரிச்சல், குடல் புண்ணாவதுடன் கிட்னியும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் காலாவதி தேதி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என குடிமகன்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

Tags : Citizens ,government task shops ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...