×

திமுக, அதிமுக உள்பட மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு

கரூர், ஜன. 7: ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 9ம்தேதி துவங்கி 16ம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 12 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்கு திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளின் சார்பில் 48 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலில் திமுக சார்பில் 3 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 9 உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் ஜனவரி 6ம் தேதி அன்று பதவியேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களிலும், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களிலும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். மாவட்ட கவுன்சிலர்கள் 12 பேரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பதவி ஏற்று கொண்டனர். இவர்கள் அனைவருக்கும், இதில் மூத்த உறுப்பினரான கண்ணதாசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றுக் கொண்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்ட நிகழ்வினை தொடர்ந்து, தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம்தேதி அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : District Councilors ,AIADMK ,DMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...