×

சுரண்டை பகுதியில் அடிக்கடி தடைபடும் பிஎஸ்என்எல் சேவைகள்

சுரண்டை, ஜன. 7: சுரண்டை பகுதியில் பிஎஸ்என்எல் சேவைகள் அடிக்கடி தடைபடுவதால்  வியாபாரிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். சுரண்டையில் கடந்த 40 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பான பங்காற்றி வந்தது.   வங்கிகள், ஏடிஎம் மையங்கள், மின்வாரிய அலுவலகம், பத்திரப்பதிவு உள்ளிட்ட அரசு சேவைகளும் மற்றும் பணபரிமாற்றங்கள், இ சேவை மையங்கள், ஆன்லைன் வர்த்தகம், போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தல் என பல பணிகளில் இன்டர்நெட் சேவைகள் மூலமாக நடந்து வருகின்றன. இதற்காக பொதுமக்கள் பெரிதும் நம்பியிருந்தது பிஎஸ்என்எல் சேவையே. ஆனால் சுரண்டையில் சமீபகாலமாக பிஎஸ்என்எல் சேவைகள் அடிக்கடி தடைபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மின்தடை நேரங்களில் தடையின்றி சேவைகள் தொடர ஜெனரேட்டர் பயன்படுத்துவதற்காக 2 பெரிய ஜெனரேட்டர் இருந்தும், அதனை பல மாதங்களாக பயன்படுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல மணி நேரங்கள் மின்தடை ஏற்படும் போதும், மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை ஏற்படும் போதும்  தரைவழி  இணைப்பு (லேண்ட் லைன்) முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. எனவே அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விசாரித்தால், ஜெனரேட்டருக்கான டீசல் செலவை குறைக்க ஜெனரேட்டரை இயக்குவதில்லை என கூறுகின்றனர். தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் முக்கிய பணிகள் அனைத்தும் இன்டர்நெட் சேவை மூலம் செயல்படுத்தப்படும் நிலையில், மின்தடை நேரங்களில் சேவை முற்றிலும் துண்டிக்கப்படுவதால் பிஎஸ்என்எல் இணைப்புகளை திரும்ப ஒப்படைப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த பகுதியில் 1500க்கு மேல் இருந்த இணைப்புகள் தற்போது 700க்கும் கீழ் வந்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கிராமப்புற பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவைகள் சரிவர கிடைக்காமல் இணைப்புகளை பலர் சரண்டர் செய்து வரும் நிலையில், இருக்கும் வசதிகளை சுரண்டை பிஎஸ்என்எல் நிர்வாகம் சரிவர செயல்படுத்தாதது அனைத்து தரப்பினரையும் கவலையடைய செய்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுரண்டை பகுதியில் பிஎஸ்என்எல் சேவையின் தரத்தை மேம்படுத்தி தேவையான கூடுதல் வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : BSNL ,exploit area ,
× RELATED பந்தலூரில் பிஎஸ்என்எல் சேவை குறைபாடு