×

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சிகுழு, ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

சேலம், ஜன.7: சேலம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற, மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.  சேலம் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில் உள்ள 29 மாவட்ட கவுன்சிலர், 288 ஒன்றிய கவுன்சிலர், 385 ஊராட்சி மன்ற தலைவர், 3,597 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 3 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், 8 ஊராட்சி தலைவர், 392 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு பெற்றனர். மீதியுள்ள 3,896 பதவிகளுக்கு போட்டி ஏற்பட்டது. 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 18 இடங்களையும், திமுக 6 இடங்களையும், பாமக 4 இடங்களையும், தேமுதிக ஒரு இடத்தையும் கைப்பற்றியது. 288 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக கூட்டணி 176 இடங்களையும், திமுக கூட்டணி 83 டங்களையும், சுயேட்சைகள் 29 இடங்களையும் பெற்றது. சேலம் ஊரக உள்ளாட்சிஅமைப்பில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்ட 2 ஊராட்சி மன்றத்தின் தலைவர் தவிர மீதியுள்ள 4,297 பதவிகளுக்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நேற்று அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில், அதிகாரிகள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். சேலம் மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர்கள் 29 பேரும், சேலம் பழைய நாட்டண்மை கழக கட்டிட வளாகத்தில் உள்ள மன்றத்தில் பதவி ஏற்று, அங்குள்ள பதிவேட்டில்  கையெழுத்திட்டனர். வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு அவர்களது கட்சி  நிர்வாகிகள் மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர். இதனையொட்டி, ஊராட்சி அலுவலகத்தில் துணை கமிஷனர் தங்கதுரை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை மாநகர போலீஸ் கமிஷனர்  செந்தில்குமார் ஆய்வு செய்தார். இதேபோல்,  20 ஒன்றிய அலுவலங்களிலும் 288 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். 383 ஊராட்சி மன்ற தலைவர்களும் ஊராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றனர். வருகிற 11ம் தேதி மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணை தலைவர், 20 ஒன்றியத்தில் தலைவர், துணை தலைவர், 2 ஊராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள 383 ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags : District Council ,Local Government Election ,
× RELATED மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தி...