×

3 பிரிவுகளாக சுற்றித்திரியும் யானைகளை விரட்டுவதில் சிக்கல்

தேன்கனிக்கோட்டை, ஜன.7: தேன்கனிக்கோட்டை அருகே அட்டகாசம் செய்து வரும் யானைகள், 3 பிரிவுகளாக பிரிந்துள்ளதால், அவற்றை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானமாவு வனப்பகுதியில் முகாட்டிருந்த 60 யானைகளை கடந்த 3 நாட்களுக்கு முன், ஒசூர் வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்டினர். பேவநத்தம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 60 யானைகள், தற்போது 3 பிரிவுகளாக பிரிந்து பேவநத்தம், பாலேகுளி, ஊடேதுர்க்கம், சின்னட்டி, மேகலகவுண்டனூர், திம்மசந்திரம், லட்சுமிபுரம், கிரியனபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் ராகி,  சோளம், அவரை, துவரை, தக்காளி, பீன்ஸ் தோட்டங்களை நேற்று முன்தினம் இரவு தின்று நாசப்படுத்தின. ஏற்கனவே, தேன்கனிக்கோட்டை அருகே ஆலல்லி காட்டில் முகாமிட்டுள்ள 10 யானைகள், அறுவடை செய்து குவித்து வைத்துள்ள ராகி போர்களை தின்று நாசம் செய்து வருகின்றன.

தற்போது தேன்கனிக்கோட்டை பகுதியில் 70 யானைகள் முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் வயல்களில் நடமாட முடியாத அளவிற்கு அச்சம்  அடைந்துள்ளனர். யானைகளை வனத்துறையினர் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், 3 பிரிவுகளாக பிரிந்து சுற்றி வருவதால் யானைகளை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இது பற்றி வனத்துறையினர் கூறுகையில், ‘கடந்த ஒரு வாரமாக பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. மலை பாதைகளில் வரும் வாகனங்கள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் கண்ணுக்கு தெரியாத அளவில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் 10 மணிக்கு மேல்தான் பனி சற்று குறைகிறது. இதனால் யானைகளை விரட்டுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும், கிராம மக்களின் உதவியுடன் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்