×

கிருஷ்ணகிரி அருகே ₹26 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஜன.7:  கிருஷ்ணகிரி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ₹26 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, பல்வேறு இடங்களுககு கொண்டு செல்லப்படுவதாக, ஏடிஎஸ்பி சக்திவேலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான போலீஸார், நேற்று இரவு கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஆடவர் கல்லூரி அருகே தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். வேனில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பண்டல், பண்டலாக இருந்ததை கண்டறிந்தனர்.

இதையடுத்து வேனை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சிராஜ் என தெரிந்தது. மேலும், திருமலை நகர் பகுதியில் உள்ள குடோனில் இருந்து குட்கா பொருட்கள் எடுத்துச் செல்வதாக டிரைவர் தெரிவித்தார். பின்னர், போலீசார்திருமலை நகரில் உள்ள குடோனில் சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அடங்கிய 232 பண்டல்கள், மூட்டைகள் கண்டறிந்தனர். இதனை பறிமுதல் செய்த போலீஸார், டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.26 லட்சமாகும். இதுதொடர்பாக டவுன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், டிரைவர் சிராஜை கைது செய்து, மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Kutka ,Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்