×

மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 2800 பேர் பதவியேற்பு

தர்மபுரி, ஜன.7: தர்மபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 2800பேர் நேற்று பதவியேற்று கொண்டனர். தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், கடத்தூர், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் என 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், 18 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 188 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 251 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 2,343 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என 2800 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக 27ம் தேதி மற்றும் 30ம் தேதி தேர்தல் நடந்தது. 2800 பதவிகளுக்கு 7098பேர் போட்டியிட்டனர். கடந்த 2ம் தேதி வாக்குப்பதிவு எண்ணப்பட்டது. ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியிடங்களுக்கு 636 பேரும், 11 ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் 11பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 2ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில், 2800 பதவிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த 2800 பதவியில் ஒரு ஊராட்சி மன்றத்தலைவர் பதவியை தவிர, மன்ற அனைவரும் நேற்று பதவியேற்றனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்திலும், ஒன்றிய குழு உறுப்பினர் அந்தந்த பகுதி பிடிஒ அலுவலகத்திலும், ஊராட்சி மன்றத்தலைவர், ஊராட்சிமன்ற உறுப்பினர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. வருகிறன்ற 11ம் தேதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர், ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர், மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

Tags : elections ,government ,
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...