×

புதிய ஊராட்சிகள் தேர்வு குறித்து 11ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம்

விழுப்புரம், ஜன. 7:  விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தினை பிரித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உருவாக்கியதைத்தொடர்ந்து, உத்தேசிக்கப்பட்ட புதிய கிராம ஊராட்சி உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள கிராம ஊராட்சிகள் தொடருதல் குறித்து முதல் கருத்துக்கேட்புக்கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 11ம் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில் உத்தேசிக்கப்பட்ட புதிய கிராம ஊராட்சி உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள கிராம ஊராட்சிகள் தொடருதல் குறித்து விவரிக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட கருவேப்பிலைப்பாளையம் குக்கிராம பகுதியினையும், விழுப்புரம் மாவட்டம் காந்தலவாடி ஊராட்சிக்குட்பட்ட கருவேப்பிலைபாளையம் குக்கிராம பகுதியினையும் ஒருங்கிணைத்து கருவேப்பிலைபாளையம் என்ற புதிய கிராம ஊராட்சியினை உருவாக்கி விழுப்புரம் மாவட்டத்துடன் இணைத்தல். சிறுத்தனூர் ஊராட்சியிலிருந்த கருவேப்பிலைபாளையம் குக்கிராமத்தை பிரித்து புதிய ஊராட்சி உருவாக்கப்படுவதினால், சிறுத்தனூர் கிராம ஊராட்சியில் மீதமுள்ள பகுதி சிறுத்தனூர் ஊராட்சியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடருதல்.

காந்தலவாடி ஊராட்சியில் இருந்த கருவேப்பிலைபாளையம் குக்கிராமத்தை புதிய ஊராட்சியாக உருவாக்கப்படுவதினால் காந்தலவாடி கிராம ஊராட்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடருதல் குறித்து விவாதிக்கப்படுகிறது. பொதுமக்கள், தொண்டுநிறுவனங்கள், குடியிருப்போர் நலசங்கங்கள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம். அதேபோல் உத்தேசிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆட்சி எல்லை குறித்து வரும் 11ம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் விவரிக்கப்படுகிறது.  
 காணை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செ.குன்னத்தூர், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் இணைத்தல், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எஸ்.மேட்டுப்பாளையம், கண்டமங்கலம் ஒன்றியத்தில் இணைத்தல். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு தற்போது முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கழுமலம், கொழுந்திராம்பட்டு, குலதீபமங்கலம், நெடுகம்பட்டு, சடைகட்டி, சொரையப்பட்டு, விளந்தை, டி.அத்திப்பாக்கம் உள்ளிட்ட 8 கிராம ஊராட்சிகள் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இணைத்தல். மேலும், அந்தியந்தல், தேவரடியார்குப்பம், ஜம்பை, காங்கேயனூர், மேலந்தல், முருக்கம்பாடி, சித்தப்பட்டினம் ஆகிய 7 ஊராட்சிகளை ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்தல் தொடர்பாக நடைபெறும் கூட்டத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். பொதுமக்கள், தொண்டுநிறுவனங்கள், குடியிருப்போர்நல சங்கத்தினர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Opinion meeting ,
× RELATED தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு...