×

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பதவியேற்பு விழா

கடலூர், ஜன.7: கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள்பதவி ஏற்பு விழா அனைத்து ஒன்றிய அலுவலகம், கிராம ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது. ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவில் தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து இடம்பெறாமல்போனது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் 29 மாவட்ட கவுன்சிலர்கள், 287 ஒன்றிய கவுன்சிலர்கள், 683 ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 5,040 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் சாத்தமங்கலம் கிராம ஊராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதன்படி மாவட்ட கவுன்சிலர்கள் பதவி ஏற்பு கடலூர் ஊரக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கிலும், 14 ஒன்றியங்களில் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பும் நடந்தது. இதுபோன்று ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 29 மாவட்ட கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். இதில் 16வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் இருந்ததால் 15 நிமிடம் மாவட்ட ஆட்சியர் அவரது வருகைக்காக காத்திருந்து பின்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஊரக வளர்ச்சி மாவட்ட குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் என்ற நிலையில்  கூட்டம் தொடங்கியதும் தமிழ் தாய் வாழ்த்தும், கூட்டம் நிறைவு  பெற்றபின் தேசிய கீதமும் இடம்பெறவில்லை. ஆட்சியர் தலைமையில் நடந்த  கூட்டத்திலேயே இதுபோன்ற நடைமுறை சமூக ஆர்வலர்களையும் உள்ளாட்சி  பிரதிநிதிகளையும் முகம் சுளிக்க வைத்தது.  அரசு விதிகளின்படி அரசு  விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் கண்டிப்பாக இடம்  பெற்றிருக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள்  பதவி ஏற்பு விழாவில் இடம்பெறாமல்போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி  உள்ளது.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்பு முடிந்த நிலையில் வருகிற 11ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் 14 ஒன்றியங்களில் ஒன்றிய சேர்மன் மற்றும் துணைச் சேர்மன், கிராம ஊராட்சிகளில் துணைத் தலைவர்கள் தேர்விற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் நடத்தப்படுகிறது.

Tags : Candidate Candidates ,
× RELATED செம்மஞ்சேரியில் ம.நீ.ம. வேட்பாளரை...