×

கடலூர் மாவட்டத்தில் தனிப்பெரும்பான்மை இல்லாத அதிமுக

கடலூர், ஜன. 7: கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழுவைப் பொறுத்தவரை 29 மாவட்ட கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இதில் 12 இடங்களில் அதிமுகவும், 13 இடங்களில் திமுகவும் வெற்றி கண்டுள்ளது. கூட்டணி பலத்தில் அதிமுக ஒரு இடத்தில் மட்டும் கூடுதலாக பெற்றுள்ள நிலையில் சேர்மன் பதவி யாருக்கு என்பதில் கேள்வி எழுந்துள்ளது. அதிமுக கூட்டணி 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இதில் 2 பாமக மற்றும் ஒரு தேமுதிக அடங்கும். ஏற்கனவே மாவட்ட ஊராட்சி குழு தலைவராக பாமக இடம்பெற்றுள்ள நிலையில் மீண்டும் பாமக கடலூர் மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியைபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. ஆனால் 2 கவுன்சிலர்கள் மட்டுமே பெற்றுள்ள பாமக இதில் தங்களுக்கு சாத்தியமான நிலை இருக்குமா என்பதில் சலசலப்பில் உள்ளது. இதற்கிடையே திமுக கூட்டணிக்கு சேர்மன், துணைச் சேர்மன் பதவிக்கு ஒரு வேட்பாளர் மட்டுமே இருந்தால்போதும் என்ற நிலையில் அதிமுகவின் செயல்பாட்டில் அதிருப்தியில் உள்ள ஒரு வேட்பாளரை மட்டுமே எதிர்நோக்கியுள்ளது. இதன் மூலம் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வேட்பாளருக்கு துணை சேர்மன் பதவி வழங்கப்படலாம் என்று அரசியல் தரப்பினர் தெரிவித்தனர். இதற்கிடையே அதிமுக, திமுக இரு கூட்டணிகளும் சேர்மன் பதவியில் வெற்றிக்காக தேமுதிகவின் ஒரு வேட்பாளர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுபோன்று 14 ஒன்றியங்களில் 287 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இதில் 110 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றுள்ளது.

 இதனால் ஒன்றியங்களிலும் கூட்டணியின் அதிக பெரும்பான்மையிலேயே சேர்மன், துணைச் சேர்மன் பதவியை தக்க வைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இதில் பாமக விருத்தாசலம், கம்மாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே சேர்மன் பதவியை வகித்து உள்ள நிலையில் கூட்டணிக்கான ஒதுக்கீட்டில் மீண்டும் பெறுவதற்கு களம்கண்டு வருகிறது. இதற்கிடையே மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய குழு இடங்களை தக்கவைக்க நிர்ணயிக்கக்கூடிய வகையில்  உள்ளாட்சிப் பதவிகளில் வெற்றிபெற்றுள்ள பாமக, தேமுதிக உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சியினரும் தங்களுக்கும் சேர்மன், துணைச் சேர்மன் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை பதித்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த எம்எல்ஏ பதவிகளை இழந்துள்ள நிலையில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலம் மீண்டும் கால் பதித்துள்ள நிலையில் சேர்மன், துணை சேர்மன் பதவியை தங்களுக்குபெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. கடலூரில் நடந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவிற்கு வந்திருந்த மாவட்ட செயலாளரும் முன்னாள் தேமுதிக எம்எல்ஏவுமான சிவக்கொழுந்துவிடம் கேட்டபோது: கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர்கள் 17 இடங்களையும், மாவட்ட கவுன்சிலர் ஒரு இடத்தையும் தேமுதிக பிடித்துள்ளது. மக்களின் ஆதரவோடு இந்த வெற்றியை பெற்றுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் சேர்மன், துணைச் சேர்மன் இடத்தை பெறுவதற்கு கட்சியின் மேலிடத்தில் தெரிவித்துள்ளோம். இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு எங்களுக்கு சாதகமான சூழலை எதிர்நோக்கி உள்ளோம். இதில் கண்டிப்பாக வெற்றி காண்போம் என்றார்.

Tags : AIADMK ,Cuddalore district ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...