×

வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம் குமரி பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு திருவட்டார் கோயிலில் இரவு நடந்தது

நாகர்கோவில், ஜன.7: வைகுண்ட ஏகாதசியையொட்டி குமரி மாவட்ட பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி ஆகும். இந்த நாளில் பெருமாள் கோயில்களில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குமரி மாவட்டத்தில் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில், பறக்கை மதுசூதன பெருமாள் கோயில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோயில், சுசீந்திரம் துவாரகா கிருஷ்ணன்கோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கிருஷ்ணசுவாமி கோயில், கோட்டார் ஏழகரம் பொன் பொருந்தி நின்றருளிய பெருமாள் கோயில், சிறமடம் பெருமாள் கோயில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கருட வாகனத்தில் பெருமாள் சொர்க்கவாசலை கடந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நேற்று இரவு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி நேற்று காலையில் அங்கு அகண்டநாம ஜெபம், பஜனை, பகல் அன்னதானம் ஆகியன நடைபெற்றது. மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியனவும் நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் தொடர்ந்து சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஒரே ஆண்டில் 2 வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்

மார்த்தாண்டம்: மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலை பொழுதாகும். இக்காலத்தில் வைகறையில் சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாக கருதப்படுகிறது. அக்காலத்தை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்றும் அழைப்பர். மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பு மற்றும் விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. அதுபோல ஏகாதசி விரதம் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. கண்ணன் கீதையில் ‘மாதங்களில் நான் மார்கழி’ என கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் ‘மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள்’ என வர்ணிக்கிறார். தமிழ் மொழியில் ‘திருவாதிரை’ என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ‘ஆர்த்ரா’ என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. அந்தவகையில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் எல்லா சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்தி காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன்.

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11ம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இந்நாளில் திறக்கப்படுவதாக ஐதீகம். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோயில் செல்வர். அதிகாலையில் பெருமாள் கோயில்களில் பொதுவாக வடக்குத்திசையில் என்றும் மூடப்பட்டிருந்து, இன்று மட்டுமே திறக்கும் ‘சொர்க்க வாசல்’ என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.
இந்த 2020ம் ஆண்டு லீப் வருடமாக வருகிறது. அதுபோல 20, 20 என எழுத்துக்களும் தனிச்சிறப்பு பெறுகின்றன. இதுபோல இந்த ஆண்டில் வைகுண்ட ஏகாதசியும், ஆருத்ரா தரிசனமும் 2 முறை வருகின்றன. நேற்று (6ம் தேதி) திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசியாகும். அதுபோல வரும் 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இதுபோல இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) மீண்டும் வைகுண்ட ஏகாதசி வருகிறது. மேலும் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் அம்மாதம் 30ம் தேதி (புதன்கிழமை) வருகிறது. ஒரே ஆண்டில் 2 வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆருத்ரா தரிசனம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.

Tags : Vaikunda Ekadasi Ceremony ,temples ,Kumari Perumal ,Thiruvattar Temple ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு