×

கைத்தறி ரக ஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் நலத்திட்டம் கிடைக்கவில்லை நெசவாளர்கள் வேதனை

பரமக்குடி, ஜன.7: அரசின் நலத்திட்டங்களான பசுமை வீடுகள், கைத்தறி ரக ஒதுக்கீடு, மருத்துவக் காப்பீடு போன்ற திட்டங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என நெசவாளர்கள் புலம்பியுள்ளனர். பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம், குமரக்குடி, சோமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் நெசவு தொழில் செய்து வருகின்றனர். மருத்துவ காப்பீடு, பசுமை வீடுகள் திட்டம், குடும்ப ஊதியம், 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவு உபகரணங்கள் திட்டம் என நெசவாளர்களுக்கு பல சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதில் எந்த திட்டமும் நெசவாளர்களுக்கு பயன் அளிக்கும் விதமாக இல்லை என குற்றம்சாட்டுகின்றனர். கைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 22 ரகங்களை தமிழக அரசு 11 ரகங்களாக குறைத்துள்ளது. அதையும் சரியாக அமல்படுத்தாததால் அந்த ரகங்களில் விசைத்தறி புகுந்துவிட்டது. கோ ஆப்டெக்ஸ் உருவாக்கப்பட்டதே கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்படும் ரகங்களை விற்பனை செய்வதற்குதான். ஆனால் கோ ஆப்டெக்ஸில் விசைத்தறி உற்பத்திகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் நெசவாளர்களின் காப்பீடு திட்டம் முடங்கி போய்விட்டது. பசுமை வீடுகள் திட்டத்திற்கு கிராம பகுதியில் பட்டா நிலம் கட்டாயம் என்பதால் 750 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 140 நெசவாளர்கள் மட்டுமே பயனடைந்து உள்ளனர். அதிகமான மக்கள் வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். 100 யூனிட் இலவச மின்சாரம் என்பது பெயரளவுக்கு வழங்கப்படுகிறது. வாடகை வீட்டில் குடியிருக்கும் நெசவாளர்கள் வீடு மாறும் போதும், மின்சார வாரியம் மற்றும் கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நடையாய் நடக்க வேண்டியுள்ளது. அப்படியும் இலவச மின்சாரம் கிடைப்பதில்லை. இதனால் நெசவாளர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தமிழக அரசின் நலத்திட்டங்களால் நெசவாளர்களுக்கு எந்த பயனும் இல்லை. மத்திய அரசின் நலத்திட்டங்களையாவது மாநில அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது நெசவாளர்களின் கோரிக்கையாக உள்ளது. நெசவாளர்கள் கூறுகையில், அரசின் நலத்திடங்களை எங்களால் அனுபவிக்க முடியவில்லை. நலத்திடங்களை பெற அதிகாரிகளிடம் மன்றாட வேண்டியுள்ளது. இதனால் நெசவாளர்களின் வாழ்க்கை சிக்கலாகி வருகிறது.. எனவே அரசின் நடத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : weavers ,state ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...