இடைநிலை ஆசிரியர் சங்கம் நாளை வேலை நிறுத்தம்

சிவகங்கை, ஜன. 7: நாளை(ஜன.8) நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பங்கேற்கும் என மாநில பொது செயலாளர் தெரிவித்தார். சிவகங்கையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் திருச்சியில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை,மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். அரசு உயர்நிலைமேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் உயர்கல்வி பயின்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, வரக்கூடிய பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்விற்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அறை கண்காணிப்பாளர் பணியில் இருந்து முற்றிலுமாக விலக்களிக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். புதிய பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பிப்.6அன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நாளை நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் முழுமையாக பங்கேற்கும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Intermediate Teachers Association ,
× RELATED கமுதி அருகே திமுகவில் இணைந்த 200 அதிமுகவினர்