×

தேசிய அறிவியல் மாநாட்டில் ஆர்எஸ்.மங்கலம் பள்ளி சாதனை

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.7: ஆர்.எஸ் மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு சாதனை படைத்தனர்.  தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் மற்றும் கேரள அறிவியல் தொழில்நுட்பக் கழகம் சார்பில் 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மற்றும் அண்டை நாடுகளில் இருந்தும் சுமார் 1000க்கும் மேற்பட்ட குழந்தை விஞ்ஞானிகள் தங்களுடைய ஆய்வு கட்டுரைகளை பல்வேறு தலைப்புகளில் சமர்ப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகமது ஆதில் மற்றும் பாசித் ஆகிய இருவரும் காய்கறி மற்றும் பழ தோல் கழிவுகளிலிருந்து உயிர் நொதி தயாரித்தல் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து சாதனை புரிந்துள்ளனர்.  இப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் போட்டிகளில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். மாணவர்களின் ஆய்வுக்கட்டுரை மதிப்பீட்டாளர்களால் ‘பி-பிளஸ்’ கிரேடு வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களின் ஆய்வுக் கட்டுரையைப் பாராட்டி பதக்கமும் சான்றிதழும் மற்றும் மதிப்பீட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியர்  ஐன்ஸ்டீன்,  ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

Tags : National Science Conference ,
× RELATED தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்க...