×

சோழவந்தானில் போலீசார் பற்றாக்குறையால் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு எஸ்பி நடவடிக்கை எடுப்பாரா?

சோழவந்தான், ஜன.7: சோழவந்தான் காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறையால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் முக்கிய காவல் நிலையங்களில் சோழவந்தான் காவல் நிலையமும் ஒன்று. சோழவந்தான் நகரம் மட்டுமன்றி, சுற்றுப்பகுதியில் முப்பது கிராமங்கள் இக்காவல் நிலைய எல்லைக்குள் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அதிகளவில் உள்ளது. இத்தகைய பகுதிகளை பாதுகாக்கும் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, எஸ்.எஸ்.ஐ, தலைமை காவலர், காவலர்கள் என சுமார் 35 பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது ஆண்,பெண் போலீசார் சுமார் பத்து பேர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மற்றவர்கள் அலுவலகப்பணி, நீதிமன்ற வழக்கு பணி, தலைவர்கள் பாதுகாப்பு என பல்வேறு அயல் பணிக்காக வெளியில் உள்ளனர். இங்கு பணியில் உள்ளவர்களும், வழக்கு விசாரணை, வாகன சோதனை, பிரேத பரிசோதனை என வெளியில் சென்று விடுவதால் பல நேரங்களில் காவல் நிலையத்தில் ஒரே ஒரு காவலர் மட்டுமே இருக்கும் நிலை ஏற்படுகிறது.

அத்தகைய நேரத்தில் கோஷ்டி மோதல் மற்றும் குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் சம்பவ இடத்திற்கு செல்லக்கூட யாரும் இல்லாத நிலை ஏற்படுகிறது. மேலும் நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தற்போது செல்போன், செயின் பறிப்பு, பணம் திருட்டு என அவ்வப்போது குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது. மேலும் சிறு சிறு திருட்டுக்களில் புதுப்புது குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். வெள்ளி, செவ்வாய் கிழமை மற்றும் விழா நாட்களில் இங்குள்ள ஜெனகை மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதால் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் தேங்கி நிற்கிறது. இதுபோல் பல்வேறு பிரச்னைகளிலிருந்து பொதுமக்கள் நிம்மதியாக வாழ சோழவந்தான் காவல் நிலையத்திற்கு கூடுதல் போலீசாரை நியமிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : SP ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்