×

வைகுண்ட ஏகாதசியையொட்டியொட்டி கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஈரோடு, ஜன. 7: ஈரோடு  கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று  அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். ஈரோடு கோட்டை  கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி  திருவிழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக  கொண்டாப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா  நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் சுவாமிக்கு நாச்சியார்  திருக்கோலத்தில் மோகினி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு  காட்சியளித்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல்  திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கஸ்தூரி அரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம்  செய்யப்பட்டு சொர்க்கவாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து  பக்தர்கள் அரங்கநாதரை வழிபட்டு சொர்க்கவாசல் வழியாக வந்தனர். பின்னர்  கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு,  பன்னீர்செல்வம் பார்க் வழியாக மீண்டும் கோயிலை சென்றடைந்தது. பின்னர்  அலங்கரிக்கப்பட்ட அரங்கநாதர் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள்  சாமியை தரிசனம் செய்யும் வகையில் சவுக்கு கட்டையால் தடுப்புகள்  அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  

மேலும் கூட்ட நெரிசலை  கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து 7ம் தேதி (இன்று) முதல் 17ம் தேதி வரை ராப்பத்து உற்சவமும்,  முத்தங்கி சேவையும், 17ம் தேதி இரவு நம்மாழ்வார் மோட்சம் அடையும்  நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம்  வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில்   நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். விழாவையொட்டி, அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத கஸ்தூரி ரங்கநாதருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு சாத்துமுறை நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம், திருப்பாவை மற்றும் ஆண்டாள் பாசுரங்கள் பாடி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதிகாலை 5.40 மணிக்கு சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் புடைசூழ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் வேணுகோபால சுவாமி எழுந்தருளி, பரமபதவாசல் வழியாக புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் ‘ரங்கா கோவிந்தா’ என பக்திப்பரவசம் பொங்க பரமபதவாசல் பிரவேசம் செய்தனர். மேலும் சொர்க்கவாசல் திறப்பு தரிசனம் மற்றும் சொர்க்கவாசல் வழியாக வர வேண்டும் என்பதற்காக கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பக்தர்கள் நள்ளிரவில் இருந்து காத்திருந்தனர். விழாவையொட்டி திருப்பார் கடலில் பள்ளிக்கொண்ட கஸ்தூரி ரங்கநாதர், கல்யாண மகாலட்சுமி மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags : Vaikunda Ekadasiyotti ,Kasturi Aranganathar Temple ,
× RELATED ஈரோட்டில் கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நாளை முதல் சுதர்சன யாகம்