×

ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவியை பிடிக்க அதிமுக தீவிரம்

ஊட்டி, ஜன. 7:நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் துணைத் தலைவர் பதவிகளை பிடிக்க ஆளுங்கட்சி மும்முரம் காட்டி வருகிறது. சுயேட்சை உட்பட எதிர் கட்சி கவுன்சிலர்களுக்கு வலை வீசி வருகின்றனர்.  நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் திமுக., சார்பில் போட்டியிட்டவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட ஊராட்சியில் 6 வார்டுகளில் 4 வார்டுகளை திமுக.,வும், ஒரு வார்டை மா.கம்யூ.,ம் பிடித்துள்ளது. அதிமுக., ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், எளிதாக மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை திமுக., தட்டிச் சென்றுள்ளது. அதேசமயம்,  ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 59 வார்டுகளில் திமுக., 31 இடங்களில் வெற்றி பெற்றுளளது. அதிக இடங்களில் திமுக.,வே வென்றுள்ளது. அதிமுக., 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக., தலா 4 இடங்களிலும், மா.கம்யூ., 2 இடங்களிலும், சுயேட்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போது இந்த நான்கு ஊராட்சிகளிலும் தலைவர் பதவிக்கான தேர்தலில் எளிதாக திமுக., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இதனால், தலைவர் பதவியை விட்டுவிட்டு துணைத் தலைவர் பதவியை குறி வைக்க துவங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் விழுந்த அடியில் இருந்து மீளவும், கட்சி மேலிடத்தில் கணக்கு காட்டவும் தற்போது

ஆளுங்கட்சி களத்தில் இறங்கியுள்ளது. துணைத் தலைவர் பதவியை பிடிக்க எதிர் கட்சியான திமுக., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சைகளிடம் ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு சில எதிர் கட்சி கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சகைள் ஆளுங்கட்சியின் ஆசை வார்த்தைக்கு இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 11ம் தேதி நடக்கும் மறைமுக தேர்தல் முடிந்த பின்னரே இந்த குதிரை பேரம் அம்பலமாக வாய்ப்புள்ளது.  எதிர் கட்சியாக இருந்த ேபாதிலும் 7 ஆண்டுகளுக்கு பின் நீலகிரியில் மீண்டும் திமுக.,வின் கை ஓங்கியுள்ளது. இது திமுக.,வின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே. மாவட்ட ஊராட்சி, நான்கு ஊராட்சி ஒன்றியங்களை எளிதாக கைப்பற்றிய போதிலும், துணைத் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என திமுக.,வினர் மும்முரம் காட்டி வருகின்றனர். ஆனால், ஆளுங்கட்சியோ குதிரை பேரத்தில் இறங்கியுள்ளது. மேலும், சில சுயேட்சை மற்றும் எதிர் கட்சி கவுன்சிலர்களை கடத்தவும் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், திமுக.,வினர் 24 மணி நேரமும் மற்ற கவுன்சிலர்கள் மட்டுமின்றி, தங்களது கவுன்சிலர்களையும் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் முடிவு, வரும் 11ம் தேதி நடக்கும் மறை முக தேர்தலின் போதே தெரிய வரும். அன்றைய தினமே மாவட்ட ஊராட்சி, நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக., தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை தக்க வைத்துக் கொள்கிறதா என்பது தெரியவரும்.

Tags : AIADMK ,Vice President ,
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...