×

அண்ணாசாலையில் பரபரப்பு மாநகர பேருந்து மேற்கூரை மீது கல்லூரி மாணவர்கள் நடனம்

சென்னை: ஓடும் மாநகர பேருந்து கூரை மீது ஏறி நடனமாடிய இரண்டு புதுக்கல்லூரி மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மந்தைவெளியில் இருந்து (தடம் எண்.21) மாநகர பேருந்து பிராட்வே நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ராயப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து வந்த போது, புதுக்கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் பஸ்சில் ஏறினார். பேருந்து புறப்பட்டு, சென்று கொண்டிருந்தபோது, 2 மாணவர்கள் மட்டும் பேருந்தின் ஜன்னலில் தொங்கியபடியும், பக்கவாட்டில் கையால் தட்டி தாளம் போட்டபடி, பாட்டு பாடிக்கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். அருகில், பைக்கில் வந்த சக மாணவர்கள் சிலர், பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை செல்போனில் வீடியோ எடுத்தனர். பேருந்து அண்ணாசாலை வந்த உடன் இரண்டு மாணவர்களும் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி நடனமாடினர். இதை பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி திருவல்லிக்கேணி போலீசார் அண்ணாசாலையில் உள்ள சிம்சன் பேருந்து நிலையத்தில் மாணவர்களை பிடிக்க தயார் நிலையில் இருந்தனர். பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததும், போலீசாரை பார்த்த இரண்டு மாணவர்களும் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடினர். ஆனால் போலீசார் விடாமல் பொதுமக்கள் உதவியுடன் 2 மாணவர்களையும் மடக்கி படித்தனர். பின்னர் இரண்டு மாணவர்களின் பெற்றோர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து கடுமையாக எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : College students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...