×

ஆபாச வீடியோ காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அதிமுக பிரமுகர் போக்சோவில் கைது

சென்னை:  வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியை  சேர்ந்தவர் பாளையம் (எ) ரவி  (68). அதிமுக பிரமுகர். ஒய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு  அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம்  செல்போனில் ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி, தனது பாட்டியிடம் கூறியதை தொடர்ந்து,  அப்பகுதி மக்கள் ரவியை பிடித்து தர்ம அடி கொடுத்து தண்டையார்பேட்டை  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின்கீழ் ரவியை கைது செய்தனர்.
* மயிலாப்பூர் டிஎன்கே கார்டன் 4வது தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் முகமது யாசிப் (20). இவர், சக மாணவன் சஞ்சய் என்பவருக்கு திருநங்கைகளுடன் பழக்கம் இருப்பதாக பலரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் நேற்று முன்தினம் முகமது யாசிப்பை இரும்பு ராடால் தாக்கிவிட்டு தப்பினார். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* மதுரவாயல் வேல் நகரை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் ரூபாவதி (35), நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் காவல் நிலையம் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், ரூபாவதியின் பையை பிடுங்கி சென்றனர். அதில், விலை உயர்ந்த ஒரு செல்போன், ₹10 ஆயிரம் இருந்துள்ளது.
* தாம்பரம் அடுத்த இரும்புலியூர், பழைய ஜி.எஸ்.டி சாலையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற அசோக் (19), ஐயப்பன் (31) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
* மாதவரம் அருகே கொசப்பூரில் சிறு தொழிற்சாலைகளில் இருந்து இரும்பு பொருட்களை திருடி, கடைகளுக்கு விற்று வந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (38), சுரேஷ்குமார் (26), நாராயணன் (35), வெங்கடேசன் (30), பிரேம்குமார் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
* கானத்தூர் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நீலாங்கரை போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ சேகர் மீது மாநகர பஸ் மோதியதில் படுகாயமடைந்தார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, பஸ் டிரைர் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த தேவராஜன் (41) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

வழக்கறிஞர் வீட்டில் 28 சவரன் கொள்ளை

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (50). சென்னை உயர் நீதிமன்ற வக்கீல். இவரது வீட்டில் அஞ்சலி, விஜயா ஆகியோர் வீட்டு வேலை செய்கின்றனர். இவர்கள் இருவரும் திடீரென வேலைக்கு வராமல் நின்றுள்ளனர். இந்நிலையில், வீட்டில் உள்ள நகைகளை சோதனை செய்தபோது 28 சவரன் மாயமானது தெரிந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Paxo ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை...