×

தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் தன்னார்வலர், தொண்டு நிறுவனங்கள் 15ம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வரும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்  தங்கள் விவரங்களை மின்னஞ்சல் மூலம் வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு குடியிருப்பு பகுதிகளிலும், பொது இடங்களிலும் உணவு அளித்து வரும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வருகின்றன.
பொதுமக்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இடையே எழும் முரண்பாடுகளை குறைப்பதற்காகவும், நாய்களின் வாழ்வியல் நிலையை மேம்படுத்தவும், மேற்கண்ட தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பை நாட இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வழிகாட்டுதலின்படி சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மேலும், தோல் நோயினால் பாதிக்கப்பட்ட நலிவுற்ற தெருநாய்களையும், இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படாத நாய்களையும் அடையாளம் காண்பதற்கும், தெருநாய்களை தத்தெடுக்கும் இயக்கத்தை ஊக்குவிப்பதற்கும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் சேவை பயன்படுத்தி கொள்ளப்படும். ஆகவே, இந்திய நல விலங்குகள் நல வாரியத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தில், தெருநாய்களுக்கு உணவு அளித்து வரும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பங்கு பெறுவதற்கு ஏதுவாக தங்களது பெயர் மற்றும் விவரங்களை vetsec59@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும், “வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரம்” என்ற இலக்கினை மாநகராட்சி அடைய தீர்மானிக்கப்பட்டு, பொது சுகாதாரத்துறை, கால்நடை மருத்துவப்பிரிவின் சார்பாக மாபெரும் அளவிலான வெறிநாய்க்கடி நோய்  தடுப்பூசி போடும் திட்டம் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் திட்டம் மண்டல வாரியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு, மண்டலங்களில் மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் ஆகியோரின் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் 8,846  நாய்கள்,  ஆலந்தூர்  மண்டலத்தில் 3,474 நாய்கள், அம்பத்தூர் மண்டலத்தில்  8,243  நாய்கள்,  சோழிங்கநல்லூர்  மண்டலத்தில்  4,461  நாய்கள்,   வளசரவாக்கம் மண்டலத்தில் 5,869 நாய்கள், அண்ணாநகர் மண்டலத்தில் 3,346  நாய்கள், அடையாறு மண்டலத்தில் 4,186  நாய்கள்,  மணலி மண்டலத்தில் 3,551  நாய்கள், பெருங்குடி மண்டலத்தில் 4,598 நாய்கள், திரு.வி.க. நகர்  மண்டலத்தில் 3,835 நாய்கள், ராயபுரம் மண்டலத்தில் 2,759 நாய்கள்,  தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5,392 நாய்கள், தேனாம்பேட்டை மண்டலத்தில்  3,706 நாய்கள் என மொத்தம்  62,266 நாய்களுக்கு வெறி நாய்க்கடி நோய்   தடுப்பூசி  மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசி போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தாமாக முன்வந்து தாங்கள் வளர்க்கும் 3,221 செல்லப்பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்படும்போது, பொதுமக்களிடம் வெறிநாய்க்கடி நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Volunteer ,Municipal Commissioner ,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...