×

மாமல்லபுரத்தில் பரபரப்பு: கடற்கரை கோயிலில் புத்தர் சிலை திடீர் அகற்றம்


சென்னை: மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவாயில் முன்பு வைக்கப்பட்டு இருந்த, புத்தர் சிலையை அதன் உரிமையாளர்கள் திடீரென தூக்கி சென்றனர்.  பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் மாமல்லபுரம் வந்தனர். அங்கு சந்தித்து பேசிய அவர்கள், புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டைகல், அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகியவற்றை சுற்றி பார்த்தனர். அப்போது, பல்லவர் கால சிற்பங்கள் முன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
சீன அதிபரை ஈர்பதற்காக சீனர்கள் புத்த மதத்தை தழுவியவர்கள் என்பதால், கடற்கரை கோயில் நுழைவாயில் முன் 2 யானைகளுக்கு நடுவே புத்தர் சிலையை வைத்தனர். இரு நாட்டு தலைவர்கள் வந்து சென்ற பிறகு ஐந்து ரதங்கள் பகுதியில் இருந்து சிலைகளை அகற்றனர். ஆனால், புத்தர் சிலை மட்டும் அகற்றப்படாமல் அப்படியே இருந்து வந்தது. இதைதொடர்ந்து, தினமும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இங்குள்ள புத்தர் சிலை முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொள்வதை வழக்கமாக கொண்டனர்.

இதற்கிடையில், செங்கல்பட்டு மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதைதொடர்ந்து கலெக்டருடன் ஆலோசிக்கப்பட்டு, புத்தர் சிலையை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பணம் கொடுத்து வாங்கி நிரந்தரமாக வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில், சிலை வைக்கப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையில், சிலை வழங்கிய உரிமையாளர்களுக்கு வாடகை செலுத்தவோ மற்றும் சொந்தமாக வாங்கவோ சம்பந்தப்பட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், சிலை உரிமையாளர்கள், யாரிடமும் எவ்வித அனுமதியும் பெறாமல், புத்தர் சிலையை திடீரென தூக்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனல், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாவுக்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : removal ,Mamallapuram ,beach temple ,Buddha ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...