×

அறநிலையத்துறை கோயில்களில் உண்டியல் காணிக்கை எண்ணுவதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்

அரசு அறநிலையத்துறை கோயில்களில் உண்டியலை திறந்து காணிக்கையை எண்ணும் போது குறிப்பிட்ட குழுக்களை மட்டுமே வைத்தே எண்ணப்படுவதை தவிர்த்து மற்ற குழுக்களையும் அனுமதித்து முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று பூசாரிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக கோயில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் வாசு, தமிழக இந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிறு கோயில் முதல் பெரிய கோயில்கள் வரை ஏராளமான கோயில்கள் உள்னன. இதில் பிரபல கோயில்களில் திருட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் விதி மீறும் பக்தர்களை கண்காணித்து தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் அவற்றை முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான கோயில்களில் கேமராக்கள் செயல் படுவதில்லை. இதே போல் கோயில் உண்டியல் திறப்பின் போதும் பல்வேறு முறை கேடுகள் நடக்க அதிகம் வாய்ப்பு உள்ளது. அரசு கோயில்களில் உண்டியலை திறந்து காணிக்கையை எண்ணும் போது குறிப்பிட்ட குழுக்களை மட்டுமே வைத்தே எண்ணப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

மற்ற குழுக்களையும் அனுமதித்து உண்டியல் திறப்பை தரமான வீடியோவில் முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான கோயில்களில் உண்டியல் திறப்பை வீடியோவில் பதிவு செய்வதில்லை என நீண்ட நாள்களாக கோவில் பூசாரிகள் பலரும் குறை கூறுகின்றனர். எனவே இனியாவது சிறு கோயில் முதல் பெரிய கோயில்கள் வரை அனைத்து கோயில்களிலும் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணி மீண்டும் உண்டியலை சீல் வைக்கும் வரை அவசியம் அனைத்தையும் தரமான முழுமையாக வீடியோ கவரேஜ் செய்ய வேண்டும் என்ற விதியை அனைத்து அதிகாரிகளும் செயல்படுத்த உத்தர விட வேண்டும். அத்தோடு கண்காணிப்பு கேமரா பொருத்தாத சிறு கோயில் முதல் பெரிய கோயில்கள் வரை அனைத்து கோயில்களிலும் புதியதாக தரமான கண்காணிப்பு கேமரா பொருத்தவும், ஏற்கனவே கோயில்களில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை மின் அலாரமும் கேமராக்களும் முறையாக பராமரிக்கப்பட்டு சரியாக இயங்குகிறதா என்பதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க உத்தர விட வேண்டும். இவ்வாறு கோயில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் வாசு மற்றும் பூசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Undertaking ,Temples ,Temples Department ,
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...