உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக முன்னிலை

புதுக்கோட்டை, ஜன.3: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. நேற்றிரவு 9மணி நிலவரப்படி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களிலும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்களிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் முன்னிலையில் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்டத்தில் 14 இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணும் அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை மெதுவாகவே நடப்பதாக வேட்பாளர்களும், முகவர்களும் தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெறலாம் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். அதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி முன்னணி விவரம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுவில் 22 வார்டுகள் உள்ளன. இவற்றில் 3, 11, 17, 18, 19, 20, 22 ஆகிய 7 வார்டுகளில் திமுகவும், 5, 10, 12, 13 ஆகிய 4 வார்டுகளில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன.

மேலும், 15 மற்றும் 21ஆவது வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், 7இல் தமாகவும், 14இல் தேமுதிகவும் முன்னிலையில் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 225 வார்டுகள் உள்ளன. இவற்றில் இரவு நிலவரப்படி 45 வார்டுகளில் திமுகவும், 26 வார்டுகளில் அதிமுகவும், 4 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், 2 வார்டுகளில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றியம் வாரியாக வெற்றி எண்ணிக்கை விவரம்:
புதுக்கோட்டை (15): அதிமுக 3, திமுக 1
அன்னவாசல் (20): திமுக 7, அதிமுக 6
குன்றாண்டார்கோயில் (14): திமுக 4, காங்கிரஸ் 1, அதிமுக 1
விராலிமலை (21): திமுக 6, அதிமுக 2
கறம்பக்குடி (16): திமுக 5, அதிமுக 1, சுயேட்சை 1
கந்தர்வகோட்டை (14) திமுக 4, காங்கிரஸ்
அரிமளம் (13): திமுக 4, காங்கிரஸ் 1
அறந்தாங்கி (26): திமுக 1, சுயேச்சை 1
ஆவுடையார்கோயில் (15): திமுக2, அதிமுக} 1
மணமேல்குடி (15): திமுக 5, காங்கிரஸ்} 1
திருமயம் (15): அதிமுக 8
திருவரங்குளம் (25): திமுக 1
பொன்னமராவதி (16): திமுக 5, அதிமுக 2
இரவில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. வாக்கு எண்ணும் பணியாளர்கள் சில இடங்களில் சுழற்சி முறையில் மாற்றப்பட்டும் வருகின்றனர்.

Tags : DMK ,Pudukkottai district ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...