×

திமுக கூட்டணி கட்சியினர் சாலை மறியல்

மணப்பாறை, ஜன.3: மணப்பாறை வாக்கு எண்ணிக்கை மையத்தில் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமானதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய 3 ஒன்றியங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மணப்பாறை அருகேயுள்ள குறிஞ்சி பொறியியல் கல்லூரி, மற்றும் ஆதவன் கலை அறிவியல் கல்லூரி, வளநாடு கைகாட்டி பகுதியில் உள்ள விடியல் கலை அறிவியல் கல்லூரி உள்பட 3 இடங்களில் நடந்தது. இதற்கென வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சிசிடிவி கேமரா மூலம் வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிப்பட்டது. திருச்சி எஸ்.பி.,ஜியாஉல்ஹக் வாக்குசாவடி மையங்களை பார்வையிட்டு வந்தவர் மதியம் மணப்பாறை வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தார். முதலில், மணப்பாறையில் தபால் ஓட்டுகள் 523யை பிரிக்கும் பணி நடந்தது.

இது போல் வையம்பட்டியில் 417 தபால் ஓட்டுகளும், மருங்காபுரியில் 298 தபால் ஓட்டுகளும் பிரிக்கும் பணி தொடங்கி நடந்தது. மிகவும் காலதாமதமாக வாக்கு எண்ணும் பணி நடப்பதாக வேட்பாளர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் திருச்சி மாவட்டம் முழுவதும் வாக்கும் எண்ணும் பணி அமைதியாக நடப்பதாக எஸ்.பி.,ஜியாஉல்ஹக் மற்றும் கலெக்டர் சிவராசு ஆகியோர் நிருபர்களிடம் கூறினர். மேலும் கலெக்டர் பேசும்போது, மாவட்டம் முழுவதும் 2,800 தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடக்கிறது என்றார். உள்ளாட்சி தேர்தல் நடந்து நீண்ட நாள் ஆனதால், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு அனுபவ குறைவு ஏற்பட்டதே காலதாமதத்திற்கு காரணம் என வேட்பாளர்கள், முகவர்கள் கூறியது பற்றி கலெக்டரிடம் கேட்டபோது, அப்படித்தான் கூறுவார்கள் என கூறியபடியே சென்று விட்டார். இதன் பின்னர், ஒன்றிய கவுன்சிலர்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் முடிவுகளை அறிவிப்பதற்கு கால தாமதம் செய்வது ஏன் என கேட்டு, திமுக மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ. கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மணப்பாறை டிஎஸ்பி., குத்தாலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தி, முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுத்தார். இதனால், வாக்கு எண்ணிக்கை நடந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ