×

விராலிமலை அருகே வறண்ட குளக்கரையில்

முசிறி, ஜன.3: திருச்சி அடுத்த விராலிமலை அருகே வேலூரை ஒட்டியுள்ள வறண்ட குளத்தின் கரையில் 16ம் நூற்றாண்டு சிற்பம் ஒன்றையும், கல்வெட்டையும் வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் அகிலா, திருச்சி தனியார் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் நளினி ஆகியோர் விராலிமலை அருகில் கீழ தொட்டியில் இருந்து தென்னலூர் செல்லும் சாலையில் வேலூரை ஒட்டியுள்ள வறண்ட குளத்தின் கரையில் சிற்பம் மற்றும் கல்வெட்டுகளை ஆய்வு செய்து டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்திற்கு தகவல் தந்தனர். இது குறித்து வரலாற்றுய்வு மைய இயக்குனர் கலைக்கோவன் கூறியிருப்பதாவது, உயரமான கரைகளுடன் விளங்கும் வேலூர் குளத்தின் தென்பகுதியில் இருபுறத்தும் 2. 40 மீ உயரத்திற்கு காரை பூச்சுடன் கருங்கல் சுவர் எடுக்கப்பட்டுள்ளது. நீர் கொள்ளளவை அறிய இச்சுவரில் பக்கத்திற்கு மூன்று கற்கள் வெவ்வேறு உயரங்களில் இணைக்கப்பட்டுள்ளன. குளத்தின் தரையிலிருந்து நான்கு அடுக்குகளாக பாறைத் தளங்களும், அவற்றின் மேல் இருக்குமாறு காரை பூச்சுடன் செங்கல் தளமும் இறுதியாக பிடிச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முன்புறம் மேற்பகுதியில் தாமரை கட்டும் கீழே 53 செ.மீ உயர ஆடவர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளன. காரை சுவற்றில் இணைந்திருப்பதால் தொடை வரை தெரியும் ஆடவர் நல்ல உடற்கட்டுடன் விளங்குகிறார். இடையில் மரம் ஏறுவார் அணிவது போன்ற மடித்துக் கட்டிய ஆடையும் கைகளின் மேற்பகுதியிலும் மணிக்கட்டிலும் வளைகள், பக்கவாட்டில் முடிந்த கொண்டையுடன், கழுத்தில் பதக்கம் வைத்த ஆரமும், இரட்டை வட சங்கிலியும் கொண்டிருக்கும் அவரது நீர் செவிகள் வெறுமையாக உள்ளன.

இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் சிறு அளவிலான பறையை இரு கைகளிலும் கொண்டுள்ள வளை குச்சிகளால் முழக்கும் அவரது கோலம், அக்காலத்து ஊர்ப்புற செய்தியை அறிவிப்பாளர்களை படம் பிடிக்கிறது. அவர் இடுப்பிற்குக் கீழ் உள்ள காரை இருபுறமும் குழித்து நீர் வெளியேற வாய்ப்பாக அகழ்ந்துள்ளனர். குளக்கரையின் பாறை சுவரோடு இணைத்து கட்டப்பட்டுள்ள 61 செ.மீ உயர, 29 செ.மீ, அகல கருங்கல் பலகையில் 16 வரிகளில் தமிழ் கல்வெட்டு காணப்படுகிறது. பொதுக்காலம் 1,698 ஆனி மாதம் 22ம் நாள் முத்துக்கர் மாட  நாயக்கரய்யன் மகன் சின்னகர் மாட  நாயக்கரய்யன். இப்பகுதியில் ஆட்சியில் இருந்தபோது இக்கலிங்கு கட்டப்பட்டதாக தெரிகிறது. அப்போது திருவானைக்காவல் மணிசராயப்பிள்ளை ஊர் மணியமாகவும், திருஞானசம்பந்தம் பிள்ளை குத்தகைதாரராகவும் இருந்ததாக கூறும் கல்வெட்டின் இறுதி வரிகள் இக்கலிங்கிற்கு காமாட்சி அம்மனே காப்பு என்கின்றன. இதில் குறிப்பிடப்படும் முத்துக்கர் மாட  நாயக்கரய்யன் ஆட்சி காலத்தில் பொறிக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டு, அருகிலுள்ள செட்டி ஊருணிப்பட்டி குளக்கரையில் ஆய்வாளர்களால் முன்பே கண்டறிந்து படி எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்த நந்தவனம், தெப்பக்குளம் ஆகியவற்றை அக்கல்வெட்டு குறிப்பதோடு, நில கொடை பற்றியும் கூறுகிறது. இது குறித்த தகவல்கள் கல்வெட்டு துறையினருக்கு தரப்பட்டு இருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் கூறியுள்ளார்.

Tags : cliff ,Viramalimalai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த...