ஆசிரியர் மீது சரமாரி தாக்குதல் அதிமுகவினர் மீது நடவடிக்கை கோரி ஆசிரியர்கள் தர்ணா

கெங்கவல்லி, ஜன.3: கெங்கவல்லியில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வீடுகளுக்கு புறப்பட இருந்த நிலையில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி, ஆசிரியர் ஒருவரை அதிமுகவினர் சரமாரியாக தாக்கினர். இதனால் ஆவேசமடைந்த ஆசிரியர்கள் நள்ளிரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணும் பணியில், துறையூர் பகுதியை சேர்ந்த மருதை மகன் ராமசாமி(42) என்பவரும் வந்திருந்தார். இவர் செந்தாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை முடிந்ததால், பணிக்கு வந்திருந்த ஆசிரியைகளை வீட்டுக்கு விரைவாக அனுப்பி வைக்கும்படி, சக ஊழியர்களிடம் அவர் கூறிக்கொண்டு இருந்தார்.  அப்போது அங்கு வந்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்தும்படி கூறிய அதிமுகவினர், திடீரென ஆசிரியர் ராமசாமியை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டு ஆத்திரமடைந்த ஆசிரியைகள், ஆசிரியரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : Teachers ,extremists ,
× RELATED இணையதள குளறுபடியால் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்