ஒரே எண்ணிக்கையில் வாக்கு பெற்றதால் குலுக்கல் மூலம் வெற்றியாளர் தேர்வு

சேலம், ஜன.3: ஏற்காடு வெள்ளக்கடை ஊராட்சி 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இரு வேட்பாளர்கள் ஒரே வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில், ஒருவர்   தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியத்திற்கான வாக்குகள், அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது.  தொடக்கத்தில் இருந்தே  ஒன்றியகுழு  உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்களுக்கான வாக்கு எண்ணும் பணி மந்தமாக நடந்தது. இதில் வெள்ளக்கடை பஞ்சாயத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. வெள்ளக்கடை பஞ்சாயத்து 8வது வார்டில் வேட்பாளர்களாக புஷ்பமலர், அம்பிகா, மகாதேவி ஆகிய மூவரும் போட்டியிட்டனர்.இதில் புஷ்பமலர் மற்றும் அம்பிகா ஆகிய இருவரும் தலா 49 வாக்குகள் பெற்றனர். இந்த நிலையில் புஷ்பமலர், அம்பிகாவுக்கு வார்டு உறுப்பினர் பதவியை வழங்கிவிடுங்கள் என்று தெரிவித்தார். இதற்கு தேர்தல் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்ந்தெடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து வேட்பாளர்கள் இருவரும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்புதல் கடிதம் அளித்தனர். தேர்தல் அதிகாரிகள் இருவரின் பெயரை எழுதி குலுக்கல் போட்டனர். அதில் புஷ்பமலர் பெயர் வந்தது. பின்னர் வெள்ளக்கடை 8வது வார்டு உறுப்பினராக புஷ்பமலர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

Related Stories:

>