×

தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களின் சம்பளத்தில் கமிஷன் பிடித்த அதிகாரிகள்

திருச்செங்கோடு, ஜன. 3: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் சாப்பாடுக்கு என பிடித்தம் செய்ததால் முற்றுகை போராட்டம் நடத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள்,  அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த பணியில் சூப்பர்வைசர்கள், உதவியாளர்கள் என்ற அடிப்படையில் 550க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இதில் சூப்பர்வைசர்களுக்கு ₹850, உதவியாளர்களுக்கு ₹650 சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பணியாற்றியவர்களுக்கு நேற்றிரவு அதிகாரிகள் சம்பளம் வழங்கினர். இதில் சூப்பர்வைசர்களுக்கு ₹850க்கு பதில், ₹700ம், உதவியாளர்களுக்கு ₹650க்கு பதில் ₹500ம் வழங்கப்பட்டது. இது தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, உணவுக்காக ₹150 பிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். பலருக்கு உணவே வழங்கவில்லை. அப்படியிருக்க ஏன் பணம் பிடித்தீர்கள் என்று அனைவரும், தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்ரமணியத்திடம் கேள்வி எழுப்பினர். மேலும் அனைவரும் வீடுகளுக்கு திரும்பாமல் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.  இது குறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில், ‘‘பல்வேறு பகுதிகளில் இருந்து 2 நாட்களுக்கு முன்பிருந்தே இங்கு வந்து தங்கி தேர்தல் பணியாற்றினோம். ஆனால் எங்களுக்கான எந்த அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரப்படவில்லை. அதே போல் மதிய உணவும் பெரும்பாலானவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் 500க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து உணவுக்காக என்று கூறி, தலா ₹150ஐ பிடித்து பெரும் மோசடி செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,’’ என்றனர். இதையடுத்து அதி்காரிகள், முழு பணத்தையும் தருவதாக கூறி, மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.

Tags : Commission ,election ,
× RELATED கூடுதல் வாக்கு செய்தி முற்றிலும்...