×

மாவட்டத்தில் 9 இடங்களில் நள்ளிரவு வரை நீடித்த வாக்கு எண்ணிக்கை

தர்மபுரி, ஜன.3: தர்மபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 10 ஒன்றியங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, 9 இடங்களில் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடந்தது. இப்பணியில் மொத்தம் 3,845பேர் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், மொரப்பூர், காரிமங்கலம் ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 188 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 251 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 2,343 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 2,800 பதவியிடங்களுக்கு, 2 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு, அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை சின்னங்களிலும், ஏனைய பதவிகளுக்கு சுயேட்சை சின்னங்களிலும் மொத்தம் 7,098 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல் கட்ட தேர்தலில்  78.33 சதவீதமும், 2ம் கட்டத்தில் 84.54 சதவீதமும் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள், போலீசார் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் மொத்தம் 9 இடங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணும் பணி தாமதமாக நேற்று தொடங்கியது. மொத்தம் 3,845 பேர் வாக்கு எண்ணும் பணியை மேற்கொண்டனர். அனைத்து ஒன்றியங்களிலும் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள், 8 மணிக்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதையடுத்து மையத்தில் போடப்பட்டிருந்த 30 மேஜைகளில் பெட்டியில் இருந்த ஓட்டுக்கள் கொட்டப்பட்டது. ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கான ஓட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பதவிக்கான வாக்குகளும், அதற்கான பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. முதல் கட்டமாக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு, கட்சி ரீதியாக போடப்பட்ட ஓட்டுகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி தலைவர் வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 8 ரவுண்டுகளாக ஓட்டுகளை எண்ணும் பணி நடக்கிறது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் முன்னிலையில் 3பேர் ஓட்டுகளை எண்ணினர். இதனை வேட்பாளர்கள், முகவர்கள் பார்வையிட்டு வருகின்றனர். ஒலிபெருக்கியிலும் தகவல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை 3 மணிநேரத்திற்கு மேல் தாமதமாக தொடங்கியது. இதனால் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை தொடர்ந்தது. தேர்தல் முடிவுகள் தெரியாத வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் காத்திருந்தனர்.

Tags : district ,places ,
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!