×

குஜிலியம்பாறை வாக்கு எண்ணும் மையத்தில் மயங்கி விழுந்த தேர்தல் அலுவலர் தாமதமாக துவங்கிய வாக்கு எண்ணும் பணி

குஜிலியம்பாறை, ஜன. 3: குஜிலியம்பாறை ஒன்றியத்தில் டிச.30ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இங்குள்ள 17 கிராம ஊராட்சிகளில் 117 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 117 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான ஓட்டுகள் அடங்கிய ஓட்டுபெட்டிகள் அனைத்தும், குஜிலியம்பாறை அருகே சி.சி.சி.குவாரியில் உள்ள ராணி மெய்யம்மை தனியார் பள்ளி ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று ஜன.2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. முன்னதாக நேற்று காலை 7 மணிக்கே ஓட்டு எண்ணும் பணிக்கு அலுவலர்கள் வந்தனர். அதைத்தொடர்ந்து ஓட்டுப்பெட்டிகள் ஒவ்வொன்றாக தனித்தனி அறைகளுக்கு கொண்டு செல்லும் பணி நடந்தது. அப்போது குஜிலியம்பாறை ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் பிடிஓ குமார் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக ஜீப்பில் ஏற்றிக் கொண்டு குஜிலியம்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கிசிச்சையின் போது இரவு நேரம் முழுவதும் அதிக வேலை பழு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததால், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டும், ரத்தத்தில் சக்கரை அளவு அதிகரித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஓட்டு பெட்டிகள் தனி அறைக்கு கொண்டு செல்லும் பணியிலும், பதிவான ஓட்டுகள் பிரிக்கும் பணியிலும் காலதாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குஜிலியம்பாறை ஒன்றிய ஏபிடிஓ முத்துக்குமரன் தேர்தல் நடத்தும் அலுவலராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து காலை 10.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது ஓட்டு எண்ணும் பணியை விரைந்து நடத்த உத்திரவிட்டார். இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கும் எண்ணும் பணியை துரிதப்படுத்தினர்.

நிருபர்களிடம் போலீசார் கெடுபிடி:
கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பத்திரிகை நிருபர்களுக்கு வாக்கு எண்ணும் மையத்தில் செய்தி சேகரிக்க அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஆனால் போலீசாரோ நிருபர்கள் செல்போன், பேனா, நோட்டு உள்ளிட்டவைகளை கொண்டு செல்லக்கூடாது என டி.எஸ்.பி.கதிரவன் உத்தரவிட்டுள்ளதாக கூறி நிருபர்களிடம் கெடுபிடி காட்டினர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க முடியவில்லை. இதேபோல் வேட்பாளர், முகவர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த கெடுபிடி இருந்தது. ஆனால் போலீசார், தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோருக்கு எந்தவித கட்டுப்பாடுகள் இன்றி செல்போன் தாராளமாக பயன்படுத்தினர்.

Tags : Kujiliyampara Voting Counter ,
× RELATED வெயிலின் தாக்கத்தால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்