×

பழநியில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் திமுக வெற்றி

பழநி, ஜன. 3: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பழநியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்ததில் பல இடங்களில் திமுக வெற்றி பெற்றது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று அந்தந்த ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள கல்லூரி வளாகங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. பழநி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.

பழநி ஊராட்சி ஒன்றியத்திற்கான 15 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 69 பேர் போட்டியிட்டிருந்தனர். பழநி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சி மன்றங்களின் தலைவர் பதவிக்கு 77 பேர் போட்டியிட்டிருந்தனர். தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கான 20 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 66 பேர் போட்யிட்டிருந்தனர். பழநி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளின் 180 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 580 பேர் போட்டியிட்டிருந்தனர். தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 38 ஊராட்சிகளுக்கான தலைவர் பதவிக்கு 99 பேர் போட்டியிட்டிருந்தனர். தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 38 ஊராட்சிகளின் 297 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 568 பேர் போட்டியிட்டிருந்தனர். திண்டுக்கல் மாவட்டக்குழு உறுப்பினர் பதவிக்கு பழநி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேர் போட்டியிட்டிருந்தனர். தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 1வது மற்றும் 2வது மாவட்டக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 8 பேர் போட்டியிட்டிருந்தனர்.

பழநி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களின் மாவட்டக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சிமன்றத் தலைவர், பஞ்சயாத்து வார்டு உறுப்பினர் வேட்பாளர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தனித்தனியாக நடந்தது. பழநி சப்.கலெக்டர் உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏழுமலையான், சேகர் உள்ளிட்டோர் தேர்தல் அலுவலராக இருந்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வாக்குச்சீட்டு முறை என்பதால் எண்ணுவது, நீக்கம் செய்வதில் பல்வேறு சச்சரவுகள் ஏற்பட்டன. கூடுதல் பணி என்பதால் நேற்று நள்ளிரவிற்கு மேலும் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டன.

நேற்றிரவு நிலவரப்படி தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட 2 மாவட்டக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மற்றும் பொன்ராஜ் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று வெற்றியின் விளிம்பில் இருந்தனர்.  அதுபோல் 20 தொப்பம்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர்களில் அநேக இடங்களில் திமுகவினர் வெற்றி பெறும் நிலையில் இருந்தனர். அதுபோல் பழநி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 58 ஊராட்சிகளுக்கான ஊராட்சிமன்றத் தலைவர் பதவியிடங்களில் ஏராளமான திமுகவினர் வெற்றி பெற்றனர்.

Tags : DMK ,places ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி