×

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 2,500 போலீசார் பாதுகாப்பு பணி

நாகை, ஜன.3: நாகை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 11 மையங்களில் நேற்று எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் நாகை, திருமருகல், கீழ்வேளூர், சீர்காழி, செம்பனார்கோவில், கொள்ளிடம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. ஆண் வாக்காளர்கள் 2,66, 094, பெண் வாக்காளர்கள் 2,73,000, இதர வாக்காளர்கள் 14, மொத்தம் 5 லட்சத்து 39 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 315 பேர் வாக்களித்தனர். 75.74 சதவீதம் வாக்குகள் பதிவாகின.30ம் தேதி இரண்டாவது கட்டமாக தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடந்தது. 5 ஊராட்சி ஒன்றியங்களில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 545 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 29 ஆயிரத்து 232 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 5 பேரும் என மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 782 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 536 பேர் வாக்களித்தனர். இது 77.57 சதவீதம் வாக்கு பதிவாகும். பதிவான வாக்குப்பதிவு பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாகை ஒன்றியத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் நாகை அமிர்தாவித்யாலயா பள்ளியிலும், கீழையூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குபெட்டிகள் வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியிலும், திருமருகல் ஒன்றியத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கீழ்வேளூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குபெட்டிகள் கீழ்வேளூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சீர்காழி ஒன்றியத்தில் பதிவான வாக்கு பதிவு பெட்டிகள் சீர்காழி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியிலும், செம்பனார்கோயில் ஒன்றியத்தில் பதிவான வாக்குபெட்டிகள் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியிலும், கொள்ளிடம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் புத்தூர் பாலிடெக்னிக் மற்றும் சீனிவாசன் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், தலைஞாயிறு ஒன்றியத்தில் பதிவாக வாக்குப்பெட்டிகள், மணக்குடியில் உள்ள வையாப்புரியார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேதாரண்யம் ஒன்றியத்தில் பதிவான வாக்கு பெட்டிகள், ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப்பளியிலும், மயிலாடுதுறை ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள், ஏ.வி.சி.பொறியியல் கல்லூரியிலும், குத்தாலம் ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள், குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வைக்கப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவு பெட்டிகள் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று (2ம் தேதி) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஏஜெண்டுகள், வேட்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் தபால் வாக்குகள் எடுத்து வரப்பட்டது. வாக்கு பெட்டியின் சீல் உடைக்கப்பட்டு வாக்குச்சீட்டுகள் கொட்டப்பட்டது. வாக்குச்சீட்டுகள் அனைத்தும் கலர் வாரியாக பிரிக்கப்பட்டு அது கட்டுகளாக கட்டப்பட்டது. இதன் பின்னர் அந்த கட்டுகள் எடுத்து வரப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டது.

Tags : police personnel ,polling centers ,
× RELATED முதல் ஐ.பி.எல் போட்டி: சேப்பாக்கம்...