×

தஞ்சை மாவட்ட உள்ளாட்சி தேர்தல் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது

தஞ்சை, ஜன. 3: தஞ்சை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்றனர். நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடந்தது.
தஞ்சை மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 127 பேர், 276 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 1,219 பேர், 589 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2,229 பேர், 4,569 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 9,805 பேரும் போட்டியிட்டனர். மொத்தம் 5,462 பதவிக்கு 13,470 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 20 பேரும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 1,140 பேரும் என மொத்தம் 1,161 பேர் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிலையில் மற்ற பதவிகளுக்கு கடந்த 27ம் தேதி 7 ஊராட்சி ஒன்றியங்களிலும், கடந்த 30ம் தேதி 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 14 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையங்களில் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு துவங்கிய இப்பணி இரவு முழுவதும் தொடர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி தஞ்சை மாவட்டத்தில் 28 ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் 9ல் திமுகவும், தலா ஒரு இடத்தில் காங்கிரஸ், அதிமுக, பாமக வெற்றி பெற்றுள்ளன.

இதேபோல் 276 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 42 இடங்களில் திமுகவும், 22 இடங்களில் அதிமுகவும், அமமுக 3 இடங்களிலும், காங்கிரஸ், தமாகா, மதிமுக, தேமுதிக, பாமக, சுயேட்சை ஆகியோர் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். தஞ்சை ஒன்றியத்தில் மொத்தமுள்ள 29 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியில் 2ல் திமுக, ஒன்றில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. ஒரத்தநாடு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் 13 இடங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழவன்னிப்பட்டில் தினகரன், வடக்கூர் தெற்கில் சர்குணம், தலையாமங்கலத்தில் சுதா, குலமங்கலத்தில் வேலாயுதம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதுதவிர பொன்னாப்பூர் மேற்கில் சுதா, ஆழியவாய்க்காலில் கோவிந்தராசு, கரைமீண்டார் கோட்டையில் திலகராணி, பொன்னாப்பூர் கிழக்கில் வெண்ணிலா, காட்டுகுறிச்சி கிராமத்தில் சீதாலட்சுமி, பருத்திகோட்டை கிராமத்தில் அன்பரசு, நடுவூர் கிராமத்தில் சுப்புலட்சுமி, மூர்த்திஅம்பாள் புரத்தில் விஜயலட்சுமி, மேலஉளூர் கிராமத்தில் சங்கர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.மொத்தமுள்ள 58 ஊராட்சி தலைவர்கள் தேர்தலில் இதுவரை 13 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவோணம் ஊராட்சி ஒன்யத்தில் உள்ள 15 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியில் 2ல் திமுகவும் வெற்றி பெற்றது.

பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 1வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் ரமாதேவி, 2வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் மாரியாயி, 3வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் முருகானந்தம் வெற்றி பெற்றனர். 4வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் பழனிவேல், 5வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன், 6வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் ராஜாத்தி வெற்றி பெற்றார்.
மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியில் 3ல் அதிமுகவும், பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 15 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியில் 3ல் திமுகவும், ஒன்றில் அதிமுகவும், ஒன்றியில் சுயேட்சையும் வெற்றி பெற்றனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் இரவு 7 மணி வரை முடிவு அறிவிக்கப்பட்ட 9 இடங்களில் திமுக 5 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி வார்டு எண்1ல் கட்டயங்காடு உக்கடை கவிதா (அதிமுக), வார்டு எண் 2ல். புக்கரம்பை ராசலட்சுமி (திமுக), வார்டு எண் 3ல் பள்ளத்தூர் அமுதா (திமுக), வார்டு எண் 4ல் ஆண்டிக்காடு உமா (அதிமுக), வார்டு எண் 5ல் புதுப்பட்டினம் சிவ.மதிவாணன் (அதிமுக), வார்டு எண் 6ல் சரபேந்திரராஜன்பட்டினம் மீனவராசன் (அதிமுக), வார்டு எண் 7ல் குருவிக்கரம்பை அருந்ததி (திமுக), வார்டு எண் 8ல் கழனிவாசல் முத்துமாணிக்கம் (திமுக), வார்டு எண் 9ல் நாடியம் பாமா (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியில் 6ல் திமுகவும், ஒன்றில் அதிமுகவும், ஒன்றில் தேமுதிகவும் வெற்றி பெற்றது. பூதலூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை சர் சிவசாமி அய்யர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கியது. இதில் 16 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் இரவு 7.15 மணி வரை அறிவிக்கப்பட்ட 11 இடங்களில் 7 திமுக, 2 அதிமுக, ஒரு பிஜேபி, ஒரு அமமுக வெற்றி பெற்றுள்ளன.அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக 3ல், அதிமுக 2ல், காங்கிரஸ் ஒரு இடத்திலும், பாபநாசம் ஒன்றியத்தில் 21 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியில் 2ல் திமுகவும், 3ல் அதிமுகவும், தமாகா ஒன்றிலும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக 2ல், அதிமுக, பாமக தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 2ல் திமுகவும், 1ல் அதிமுகவும், 1ல் மதிமுகவும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 17 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 5ல் திமுகவும், ஒன்றில் அமமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

Tags : district ,Tanjore ,DMK ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று...