×

முத்துப்பேட்டையில் திமுக மாவட்ட கவுன்சிலர் வெற்றியை அறிவிக்க கோரி தர்ணா போராட்டம்

முத்துப்பேட்டை, ஜன.3: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 17வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அமுதா மனோகரன்(திமுக), விஜயா குணசேகரன் (அதிமுக), சசிகலா (), சாந்தி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அழுதா மனோகரன் - 15273 வாக்குகள், விஜயா குணசேகரன்-14612 வாக்குகள் பெற்றனர். இதில் திமுக வேட்பாளர் அமுதா மனோகரன் 661 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் வெற்றி அறிவிப்பு தெரிந்தும் வெற்றி பெற்றதாக அறிவிக்காமல் நேரத்தை கடத்தினர். இதற்கிடையில் அதிமுக வேட்பாளர் விஜயா குணசேகரன் வாக்கு எண்ணியதில் சந்தேகம் உள்ளது திரும்ப எண்ண வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு கொடுத்தார். இதனையடுத்து அலுவலர்கள் மாவட்ட கவுன்சிலருக்கு என உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தால்தான் வெற்றி அறிவிக்க முடியும் என கூறினர். இதனையடுத்து இதில் ஏதோ சந்தேகம் இருக்கு என்று கருதிய திமுக கூட்டணி கட்சியினர் அங்கு திரண்டனர். இந்த நிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் மணிவண்ணன் அங்கு வந்தார். அப்பொழுது திமுக கூட்டணி கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அலுவலர் மணிவண்ணன் அலுவலர்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு வெற்றி அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறிவிட்டு வாக்கு சாடிய விட்டு காரில் கிளம்பினார். இதனையடுத்து திமுக வேட்பாளர் அமுதா, திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் அலுவலரின் காரை வழிமறித்து கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காரில் இருந்து இறங்கிய தேர்தல் நடத்தும் அலுவலர் மணிவண்ணன் வாக்குச் சாவடிக்குள் சென்றார். அப்பொழுது அறிவிப்பை வெளியிடும் வரை உங்களை விட மாட்டோம் என்று வாக்குசாவடி அலுவலகத்துக்குள் திமுக வேட்பாளர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பை வெளியிடும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினார். இதனால் அங்கு பதற்றமும்.. பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து வேறு வழின்றி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிவண்ணன் திமுக வேட்பாளர் அமுதா மனோகரன் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர், திமுக கூட்டணி கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

Tags : Dharna ,district councilor ,victory ,district ,DMK ,
× RELATED எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா