×

திருவாரூர் மாவட்டத்தில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது

திருவாரூர், ஜன.3: திருவாரூர் ஒன்றியத்தில் 14 வார்டுகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நேற்றிரவு 9 மணியளவில் முடிவு அறிவிக்கப்பட்ட 5 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 4 இடங்களிலும் அதிமுக வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான தேர்தல் என்பது முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டவாறு கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இதில் 37 ஆயிரத்து 344 ஆண் மற்றும் 38 ஆயிரத்து 667 பெண் மற்றும் இதரர் 14 பேர் என மொத்தமுள்ள 76 ஆயிரத்து 25 வாக்காளர்களுக்காக 150 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றதில் 27 ஆயிரத்து 399 ஆண், 30 ஆயிரத்து 64 பெண் மற்றும் இதரர் ஒருவர் என மொத்தம் 57 ஆயிரத்து 464 பேர்கள் வாக்களித்திருந்தனர்.மேலும் இவர்களுக்காக மொத்தம் 166 வாக்கு பெட்டிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் இவைகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருவாரூர் திரு.வி.க அரசு கலை கல்லூரியில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பின்னர் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மேலும் இந்த ஒன்றியத்திற்கான தலைவர் பதவி என்பது ஆண் பொது இனம் என்பதாலும் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் தேவா, அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோர் போட்டியிட்டதுடன், தலைவர் பதவியைப் பிடிப்பதற்காக திமுக 12 இடங்கள், அதிமுக 12 இடங்கள் என 2 கட்சிகளுமே சம அளவிலும் மற்றும் சி.பி.ஐ, சி.பி.எம், காங்கிரஸ், பி.ஜே.பி, தே.மு.தி.க, நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் 18 பேர் என மொத்தம் 52 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதன்படி திமுக சார்பில் 1வது வார்டில் வாசுகி அனந்தராமன், 2 வது வார்டில் குணசேகரன், 3ல் தியாகராஜன், 4ல் பத்மபிரியா செல்வகுமார்,5ல் ரேவதி வரதராஜன், 6ல் முருகேசன், 7ல் தௌலத் இக்பால், 8வது வார்டில் ஒன்றிய செயலாளர் தேவா, 9ல் சுப்பிரமணியன், 10ல் சுதா ரமேஷ், 12ல் மனோகரன் ,13 ல் லலிதா கோவிந்தராஜ் ஆகியோர் போட்டியிடும் நிலையில் 11வார்டு கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகராஜனும், 14 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வசந்தாவும் போட்டியிட்டனர். இதேபோல் அதிமுகவில் 1-வது வார்டில் பிரசன்னா, 2வது வார்டில் சிவக்குமார், 3ல் சிவசுப்பிரமணியன், 4ல் பொன்மணி, 5ல் அஷ்டலெட்சுமி, 6ல் சந்திரன் , 7ல் கீதா, 9ல்ஒன்றிய செயலாளர் மணிகண்டன், 10ல் வனிதா ,11ல் கிருஷ்ணமூர்த்தி, 12ல் நடராஜன், 13ல்கீதா ஆகியோர் போட்டியிடும் நிலையில் கூட்டணி கட்சியான தேமுதிக சார்பில் 8 வது வார்டில் திருமுருகன், மற்றும் 14 வது வார்டில் பிஜேபி சார்பில் வேதநாயகி ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் மொத்தமுள்ள 4 சுற்றுகளில் இரவு 9 மணி வரையில் நடைபெற்ற 3 சுற்றுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 1வது வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் பிரசன்னாவை விட திமுக வேட்பாளர் வாசுகிஅனந்தராமன் 688 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதேபோல் 4வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பொன்மணியைவிட திமுக வேட்பாளர் பத்மபிரியா 245 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.மேலும் 5வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அஷ்டலெட்சுமியை விட திமுக வேட்பாளர் ஆயிரத்த 852 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். மேலும் 6வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரனைவிட 406 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் முருகேசன் வெற்றி பெற்றார்.

இதேபோல் 9வது வார்டில் திமுக வேட்பாளர் சுப்ரமணியனைவிட அதிமுக வேட்பாளரான ஒன்றிய செயலாளர் மணிகண்டன் 921 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்ற நிலையில் மொத்தம் முடிவு அறிவிக்கப்பட்ட 5 வார்டுகளில் 4 வார்டுகளை திமுக கைபற்றியது குறிப்பிடதக்கது.மேலும், 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் சிவக்குமாரை விட 264 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் குணசேகரன் வெற்றி பெற்றார். 8வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட ஒன்றிய செயலாளர் தேவா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க வேட்பாளர் திருமுருகனை விட 2 ஆயிரத்து 882 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். 12வது வார்டில் திமுக வேட்பாளர் மனோகரனை விட அதிமுக வேட்பாளர் நடராஜன் 416 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். மொத்தம் அறிவிக்கப்பட்ட 8 வார்டுகளில் 6 வார்டுகளை திமுகவும் 2 வார்டுகளை அதிமுகவும் பிடித்துள்ளன.

Tags : DMK ,Tiruvarur district ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...