×

மாவட்டம் முழுவதும் 102 மி.மீ கூடுதலாக மழை

சிவகங்கை, ஜன. 3: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு சராசரி அளவைவிட கூடுதலாக 102மி.மீ மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 904.7மி.மீ ஆகும். ஆனால் கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு ஆண்டு தோறும் சீரான அளவில் மழை பெய்யவில்லை. 2008முதல் 2018ம் ஆண்டு வரை இடைப்பட்ட 9ஆண்டுகளில் அதிகபட்சமாக 2008ம் ஆண்டு 1283மி.மீ மழை பெய்ததே அதிகமான அளவாகும். 2012ம் ஆண்டு 549மி.மீ மழை பெய்ததே இந்த 9ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவில் பெய்த மழை அளவாகும். 2009ம் ஆண்டு 772மி.மீ, 2010ம் ஆண்டு 916மி.மீ, 2011ம் ஆண்டு 872மி.மீ, 2013ம் ஆண்டு 705மி.மீ மழை பெய்தது. 2014ம் ஆண்டு 920மி.மீ மழை பதிவாகியுள்ளது. 2015ம் ஆண்டில் 1097மி.மீ, 2016ம் ஆண்டு 706.5மி.மீ மழை பெய்துள்ளது. 2017ம் ஆண்டு 976.6மி.மீ மழை பதிவாகியுள்ளது. 2018ம் ஆண்டு 924.4மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆண்டுதோறும் தென் மேற்கு பருவமழை 309.6மி.மீ, வடகிழக்கு பருவமழை 413.7மி.மீ சராசரியாக பெய்ய வேண்டும்.

கடந்த 10ஆண்டுகளில் 2017ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை 526மி.மீ, 2018ம் ஆண்டு தென் மேற்கு பருவ மழை 306.21மி.மீ பெய்ததே சராசரி மற்றும் அதைவிட கூடுதலாக மழை பெய்ததாகும். மற்ற ஆண்டுகளில் தென் மேற்கு பருவமழை குறைவாகவே பெய்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜுன், ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் தொடக்கம் வரை தென் மேற்கு பருவ மழை 502.36மி.மீ பெய்தது. இது சராசரியைவிட 193மி.மீ அதிகமாகும். அக்டோபர் பிற்பகுதி முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்தது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜுன் வரையிலான கால கட்டத்தில் வெறும் 54.94மி.மீ மழை மட்டுமே பதிவானது.

அதன் பிறகே மாவட்டம் முழுவதும் கன மழை பெய்யத் தொடங்கியது. வடகிழக்கு பருவ மழையும் கூடுதலாக பெய்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு 1006.7மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவைவிட கூடுதலாக 102மி.மீ மழை பெய்துள்ளது. விவசாயிகள் கூறியதாவது:சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையை நம்பி மட்டுமே விவசாய பணிகள் செய்யப்படும். ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை சராசரியாக இருப்பதில்லை என்பதால் அதை நம்பி விவசாயம் செய்வதில்லை. கடந்த ஆண்டு மழை நன்றாக பெய்துள்ளதால் விவசாயப்பணிகள் தீவிரமாக செய்தோம். இதனால் விளைச்சலும் பாதிப்பில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நீர் வரத்து கால்வாய்கள் சரிவர பராமரிப்பில்லாதது, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து பாதிப்பு உள்ளதை ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கான வரத்து கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...