×

செய்யாறு-சென்னை இடையே செல்லும் பயணிகள் கோரிக்கை பழுதடைந்த அரசு பஸ்சை மாற்ற வேண்டும்

செய்யாறு, ஜன.3: செய்யாறு-சென்னை இடையே செல்லும் பழுதடைந்த அரசு பஸ்சை மாற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான தடம் எண்.339 என்ற பஸ் பல ஆண்டுகளாக செய்யாறில் இருந்து மோரணம், வடமணப்பாக்கம், பெருங்கட்டூர், வெம்பாக்கம், காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. செய்யாறில் இருந்து தினமும் காலை 6.20க்கும் புறப்பட்டு 10.30 மணியளவில் சென்னையை சென்றடையும். மீண்டும் சென்னையில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு செய்யாறு வந்தடைகிறது. தினமும் 2 முறை மட்டுமே இந்த பஸ் இயக்கப்படுகிறது.இந்நிலையில் இந்த பஸ் கடந்த 2 மாதங்களாக மிகவும் பழுதடைந்து ேபாக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த பஸ்சில் பயணம் செய்யும் பொதுமக்கள், அச்சத்துடனே சென்று வருகின்றனர். பஸ்சின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளதால் நேற்று முன்தினம் தேதி பயணம் செய்த பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர், ‘பழுதான பஸ்சை இயக்கி, எங்களது உயிரோடு விளையாடுகிறீர்களா?' என கேட்டு டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த பஸ்சில் இருந்து இறங்கி வேறு பஸ்சில் சென்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘பஸ் பழுதடைந்து இருப்பது குறித்து செய்யாறு பணிமனை மேலாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 30 முதல் 40 கிமீ வேகத்தில் மட்டுமே இந்த பஸ் இயக்கப்படுகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. ஓட்டை, உடைச்சல் பஸ்சை இயக்கி பயணிகளின் உயிரோடு விளையாடும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பஸ்சிற்கு பதில் வேறு பஸ்சை இயக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.

Tags : Passengers ,Cheyyar ,Chennai ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...