×

ஆதரவற்றவர்களை விட்டு வைக்காத பரிதாபம் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக மோசடி செய்யும் புரோக்கர்கள் கைது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர், ஜன.3: உதவித்தொகை வாங்கி தருவதாக ஆதரவற்ற முதியோரிடம் மோசடி செய்யும் புரோக்கர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வசதி படைத்தவர்களும் முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.இதையடுத்து தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு மீண்டும் போலியாக விண்ணப்பித்தவர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதில் தகுதியான முதியோரும் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால், கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர்.

இதையடுத்து மீண்டும் முதியோர் உதவித்தொகை பயனாளிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் குறைதீர்வு கூட்டங்கள் மூலம் முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில், முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி புரோக்கர்கள் சிலர் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபடுவதாகவும், அரசியல் தலையீடு காரணமாக வசதி படைத்தவர்கள் உதவித்தொகை பெற்று வருவதாகவும் பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். ஏற்கனவே முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் யாராவது இறந்துவிட்டால், சீனியாரிட்டி அடிப்படையில் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.இந்நிலையில், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் பல்வேறு வழிகளில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், சீனியாரிட்டி பெறுவதற்காக பலர் புரோக்கர்களை அணுகுகின்றனர். அதை பயன்படுத்திக் கொள்ளும் புரோக்கர்கள், அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக அப்பாவி முதியோர்களிடம் ₹3 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். ஏற்கனவே ஏழ்மையில் வாடுபவர்கள் கடன் வாங்கி ₹3 ஆயிரம் கொடுக்கின்றனர்.

இதற்கிடையில், வசதி படைத்தவர்கள் விண்ணப்பித்து சீனியாரிட்டியில் இடம் பிடித்து விடுகின்றனர். எனவே முதியோர் உதவித்ெதாகை பெறுபவர்கள் குறித்து அதிகாரிகள் நேரடியாக களமிறங்கி விசாரணை நடத்த வேண்டும். இந்த நேரடி விசாரணையில் உண்மையான பயனாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் முழு கவனம் செலுத்த வேண்டும்’ என்றனர்.

Tags : brokers ,pity seniors ,arrest ,orphans ,
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...