×

வேலூர் கோட்டை பூங்காவில் புத்தாண்டில் குவிந்த பிளாஸ்டிக் குப்பைகள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை

வேலூர், டிச.3: வேலூர் கோட்டை பூங்காவில் புத்தாண்டு விடுமுறை தினத்தை கொண்டாடிய பொதுமக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை வீசிச் சென்றதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல், வேலூர் கோட்டையிலும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இவ்வாறு குவிந்த பொதுமக்கள் கோட்டை பூங்காவில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசிச் சென்றனர். இதனால், கோட்டை பூங்கா முழுவதும் நேற்று அசுத்தமாக காட்சியளித்தது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் ரெய்டு நடத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘பிளாஸ்டிக் குப்பைகள் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்காமல் பூமியில் புதைந்திருக்கும். இதனால், மழைநீரை உறிஞ்ச முடியாமல் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படையும். இந்த பிளாஸ்டிக் குப்பைகளை தீயிட்டு எரித்தாலும் காற்று மாசடைந்து புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்படும். நீர்நிலைகளில் உள்ள உயிரினங்களும் பிளாஸ்டிக் குப்பைகளால் பாதிக்கப்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக தடுக்க வேண்டியது கட்டாயம்.

அதன்படி, பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை. அதிகாரிகளும் பெயரளவிற்கே ஆய்வு நடத்தி வருகின்றனர். குறிப்பாக பண்டிகை, விசேஷ நாட்களில்தான் பொது இடங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிகிறது. எனவே, பொதுமக்கள் அதிகம் குவியும் இடங்களில் விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் ஆய்வு நடத்தினால் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பறிமுதல் செய்ய முடியும். வியாபாரிகளும் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருப்பார்கள். அதிகாரிகள் சமூக அக்கறையுடன், சிரமம் பாராமல் இந்த விவகாரத்தில் செயல்பட வேண்டும்’ என்றனர்.

Tags : activists ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...