×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்பாடு மேல்புறம் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை முதலில் நிறைவு


கருங்கல், ஜன.3:  தமிழகத்திலேயே மேல்புறம் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை முதலில் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது என்று கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை ஒன்பது மையங்களில் நேற்று நடைபெற்றது. இவற்றை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே, குமரி மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் நாகராஜன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேல்புறம் ஒன்றியத்தில் திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலை பள்ளி, திருவட்டார் ஒன்றியத்தில் ஏற்றக்கோடு மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட மையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து கிள்ளியூர் ஒன்றியத்திற்கு வாக்குகள் எண்ணப்பட்ட தொலையாவட்டம் செயின்ட் ஜூட்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்ற நான்கு மையங்களில் மேல்புறம், கிள்ளியூர், முன்சிறை, திருவட்டார் ஒன்றிய பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்களை பார்வையிட்டேன். இதில் தமிழகத்தில் முதல் முறையாக மேல்புறம் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை முடிவுதான் முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கு இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது ஒரு காரணமாக இருந்தது.  பல ஒன்றியங்களில் செல்லாத ஓட்டுகள் அதிக அளவில் பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது. மின்னணு இயந்திர வாக்குப்பதிவு நடைபெற்றால் செல்லாத வாக்குப்பதிவு நடைபெறாது. வேகமாக வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். இப்போது இரவுக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் எந்த இடத்திலும் பிரச்னைகள் ஏதும் ஏற்படவில்லை. சுமூகமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Union ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...