×

நிட்டிங் துணிகள் நேரடி கொள்முதல் செய்து சிறு, குறு நிறுவனங்கள் பின்னலாடை தயாரிப்பு

திருப்பூர், ஜன.3:திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் சிறு, குறு நிறுவனங்கள்  ஜாப்-ஆர்டர் மூலம் ஆடை தயாரிப்பில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர். சிறு, குறு நிறுவனங்களுக்கு போதிய நிதி ஆதாரம் இல்லாததால் ஜாப்-ஆர்டர் முறையில் தைத்து வந்த நிலையில், குறைந்த முதலீட்டில் துணிகளை வாங்கி ஆடையாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் நிட்டிங் துணிகளை வாங்கி ஆடை தயாரிப்பில் ஈடுபட்டனர். ஏற்றுமதி நிறுவனங்களில் குறைபாடுகளால் கழிக்கப்படும் துணிகளை வாங்கி சிறு, குறு நிறுவனங்கள் ஆடை உற்பத்தியாளர்களுக்கு ஒருசிலர் விற்பனை செய்தனர்.  இந்த துணிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆடைகள் உள்நாட்டு வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.  

நிட்டிங் துணிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்ததால்  திருப்பூர் மாநகர் பகுதியில் ஆடை உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விற்பனையாளர்கள் பலர் கடைகளை துவங்கினர். பனியன், ஜட்டி, டி-சர்ட் உற்பத்தி செய்து குறைவான விலைக்கு விற்க ஆரம்பித்தனர். இதில் அதிக லாபம் கிடைத்ததால் சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் ஜாப்-ஆர்டர் என்ற நிலையிலிருந்து விலகி சுயமாக ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பிளைன் பாலிஸ்டர், பாலிஸ்டர் ஹானிஹோம், பாலிஸ்டர் நிர்மல் நிட், சாலினா(சாப்ட்), மைக்ரோ ஹானிஹோம், ஸ்பன், லாகோஸ்டா, ஜாக்பிரோ, அக்கர்லிக் இன்னர்காட்டன், திக்பிக், காலர் கிளாத், சூப்பர்பாலி, பிரிண்டேட் பிபி, ஸ்பன் விஸ்கோஸ் உட்பட பல்வேறு வகையான துணிகள் விற்பனைக்கு வந்துள்ளன.  

திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இரண்டாம் தர ஆடை விற்பனையாளர்கள்  மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த வியாபாரிகள், ஷோரும் உரிமையாளர்கள் பலர் தினமும் வந்து பல்வேறு ஆடைகளை வாங்கிச் செல்கின்றனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சிறு, குறு பின்னலாடை உற்பத்தியாளர்ளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர் கூறுகையில், ‘‘திருப்பூர் சிறு, குறு பின்னலாடை நிறுவனங்களின் நலன் கருதி இந்தியா, வங்கதேசம், வியட்நாம், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து நிட்டிங் துணிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ரிலையன்ஸ், பிர்லா ஆகிய நிறுவனங்களிலிருந்தும் துணிகளை கொள்முதல் செய்துள்ளோம்.

குறைந்த லாபம் அதிக விற்பனை என்ற இலக்கோடு துவங்கப்பட்ட வால்ரஸ் நிறுவனத்தில் தற்போது அனைத்து வகையான நிட்டிங் துணிகளை பல கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறைந்தவிலையில் விற்கப்படுவதால் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, பெங்களூர், டெல்லி, குஜராத், குவாலியர் உட்பட பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த சிறு, குறு பின்னலாடை உற்பத்தியாளர்கள்  பலர் தினமும் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். குறைந்த விலைக்கு துணிகளை வாங்கிச்சென்று ஆடை தயாரித்து  அதிக லாபத்தில் விற்பனை செய்வதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் புதிதாக தொழில் முனைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : companies ,
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!