×

வாக்கு எண்ணும் மையங்களில் கெடுபிடி பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

உடுமலை,ஜன.3: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உடுமலையில் கடும் குளறுபடி நடந்தது. பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. போலீசார், ஏஜெண்டுகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. மதியம் வரை எந்த முடிவையும் அறிவிக்காமல் மூடு மந்திரமாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் அரசு கலைக்கல்லூரியிலும், குடிமங்கலம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் பாரதியார் நூற்றாண்டு பெண்கள் பள்ளியிலும், மடத்துக்குளம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்டன.

இதற்காக விரிவான ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று பல்வேறு குளறுபடிகள் நடந்தது. பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தும், அவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. பாரதியார் நூற்றாண்டு பள்ளி வாக்கு எண்ணும் மையத்துக்கு பத்திரிகையாளர்கள் சென்றபோது, அனுமதி இல்லை என கூறி காவல்துறையினர் நுழைவுவாயில் பகுதியில் தடுத்து நிறுத்தி விட்டனர். அடையாள அட்டையை காட்டியும், எல்லா  தேர்தல்களிலும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது பற்றி கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கும், கட்சி ஏஜெண்டுகளுக்கும் உணவுவசதி எதுவும் செய்யப்படவில்லை. மைக் வசதியும் செய்யப்படவில்லை. இதனால் கட்சி ஏஜெண்டுகள் சிரமத்துக்குள்ளாயினர். மேலும் மதியம் 1 மணி வரை எந்த ஒரு தேர்தல் முடிவோ, முன்னணி நிலவரமோ அறிவிக்கப்படவில்லை. எல்லாமே மூடுமந்திரமாக நடந்தது. இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், லட்சக்கணக்கில் வாக்குகள் பதிவாகும், எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தலில் கூட காலை 9 மணிக்கே முன்னணி நிலவரம் தெரிந்துவிடும். தற்போது 400, 500 ஓட்டுகள் பதிவான ஊராட்சி வார்டுகளில்கூட தேர்தல் முடிவு மதியம் வரை அறிவிக்கப்படவில்லை என்றனர்.

Tags : journalists ,polling centers ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!