×

திருமூர்த்தி அணையிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் விட விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், ஜன.3:உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டுமென தமிழக முதல்வருக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் ஒப்பந்தப்படி உப்பாறு அணைக்கு ஆண்டுதோறும் தண்ணீர் வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தப்படி கடந்த சில ஆண்டுகளாக  உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்காததால்  நேரடி பாசனம் 15 ஆயிரம் ஏக்கரும், மறைமுக பாசனம் 20 ஏக்கர் பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக  தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது.  பரம்பிக்குளம்-ஆழியாறு  நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த்த மழையால் திருமூர்த்தி அணையில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.  

தற்போது பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் தேவை இல்லை.  இந்நிலையில் தாராபுரம் தாலுகா குண்டடம் ஒன்றியம் கெத்தல்ரேவ் கிராமம் பனைமரத்துப்பாளையத்தில் ஆயிரத்து 100 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட உப்பாறு அணையில் ஒரு அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. திருமூர்த்தி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பிஏபி விவசாயிகளுக்கு தற்போது தேவையில்லாத சூழ்நிலையில் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு அணை நிரம்பும் வரை தண்ணீர் திறந்துவிடவேண்டும். இதனால், பல ஆண்டுகளாக வானம் பார்த்த பூமியாக காட்சியளிக்கும் உப்பாறு பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். வலது, இடது கரை வாய்க்கால் திறக்கப்பட்டால் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். இதனால், கால்நடைகளுக்கு தேவையான தீவின பயிர்களை பயிர் செய்து விவசாயிகள் இருப்பு வைத்துக் கொள்வர். உப்பாறு விவசாயிகளின் நலன் கருதி திருமூர்த்தி அணையிலிருந்து அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Thirumurthi Dam ,Upparu Dam ,
× RELATED மண் மேடாக காட்சி அளிக்கும் கிழக்கு...