×

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மாத்திரை வழங்க வேண்டாம்

திருப்பூர், ஜன.3: டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவர் பரிந்துரை இல்லாமல், மருந்து, மாத்திரை தரக்கூடாது என, மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பல இடங்களில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: காய்ச்சல்தான், டெங்கு பாதிப்பின் அறிகுறி. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள், மருந்துக்கடைகளில் இருந்து மருந்து, மாத்திரை வாங்கி உட்கொள்கின்றனர். மருந்து உட்கொண்ட, ஓரிரு நாட்களில், காய்ச்சல் குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவர். சில நாள் இடைவெளியில், மீண்டும் காய்ச்சல் ஏற்படும். இது, டெங்கு பாதிப்பாகவும் இருக்கலாம். டெங்குவை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்திவிட முடியும். சுய மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மருந்துக்கடைக்காரர்கள், காய்ச்சலுக்கு மருந்து, மாத்திரை கேட்பவர்களுக்கு, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், வழங்கக்கூடாது. அவர்களை, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற, அறிவுறுத்த வேண்டுமென, வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினார்கள்.

Tags : doctor ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!