×

வீடியோ காலில் பேசியபடியே தூக்கு மாட்டிய வழக்கறிஞர் பரிதாப சாவு

காலாப்பட்டு, ஜன. 3: காலாப்பட்டு அருகே நிச்சயிக்கப்பட்ட பெண் பேசாததால் அவரை மிரட்டுவதற்காக வீடியோ காலில் பேசியபடியே தூக்கு போட்ட வழக்கறிஞர் எதிர்பாராதவிதமாக கயிறு இறுக்கியதால் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு அடுத்த கனகசெட்டிக்குளம் புதுநகரை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் சுரேஷ் (28), புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருக்கும், கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் வருகிற 27ம் தேதி திருமணம் செய்ய இருவீட்டார் முன்னிலையில் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அப்போது முதல் இருவரும் தினமும் போனில் பேசி வந்தனர். ஆனால் கடந்த 2 நாட்களாக மணப்பெண் இவரிடம் பேசவில்லையாம். நேற்று முன்தினம் இரவும் அதேபோல் போனில் பேசி உள்ளார். ஆனால் அவர் பேசவில்லையாம். இறுதியாக மணப்பெண் போனை எடுத்துள்ளார்.அப்போது சுரேஷ் தனது செல்போனில் வீடியோ கால் செய்து அதனை ஒரு இடத்தில் வைத்துவிட்டு மின்விசிறி கம்பியில் கயிற்றை கட்டி மறுமுனையை தனது கழுத்தில் மாட்டிக்கொண்டு கீழே ஒரு ஸ்டூலில் நின்றபடி மணப்பெண்ணிடம் போனில் வீடியோ கால் பேசி உள்ளார். பின்னர் என்னிடம் தொடர்ந்து பேசாவிட்டால் இதேபோல் தூக்கு மாட்டி இறந்து விடுவேன் என மிரட்டினாராம். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டூல் தவறி விழுந்தது.

அதே நேரத்தில் அவரது கழுத்தை கயிறு இறுக்கிக்கொண்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண் சுரேஷின் நண்பருக்கு போன் செய்து விவரத்தை கூறி உள்ளார். அவர் உடனடியாக சுரேஷின் வீட்டுக்கு வந்து அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அறையை திறக்க முயன்றபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சுரேஷ் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மணப்பெண் பேசாததால் வீடியோ கால் செய்து விளையாட்டாக தூக்கு மாட்டிய வழக்கறிஞர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : lawyer ,death ,victim ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு