×

பெண்கள் பாதுகாப்பு இல்லம்

புதுச்சேரி, ஜன. 3: காரைக்கால், மாகே, ஏனாமில் பெண்கள் பாதுகாப்பு இல்லம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இதற்காக செயலர், காவல்துறை தலைவர் அடங்கிய கமிட்டி உறுப்பினர்களை அரசு தேர்வு செய்துள்ளது. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை காக்கவும், அவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் வகையிலும் ஸ்வதார்கிரி என்ற திட்டத்தை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை கடந்த 2016ம் ஆண்டு துவக்கியது. பெண்களுக்கு கடினமான நேரங்களில் ஆதரவும், உதவி அளிக்கும் வகையிலும் மத்திய அரசு இதனை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாத்து தொழில் பயிற்சி, கவுன்சலிங், சட்ட உதவி, காவல்துறை உதவி, தங்குமிடம், உணவு, உடை ஆகியவை வழங்கப்பட வேண்டும். மத்தி அரசு இதற்கான நிதியுதவியை மானியமாக வழங்கி வருகிறது. வன்முறையில் இருந்து தற்காத்து கொள்ள வரும் பெண்கள், கைக்குழந்தையுடன் ஆதரவற்று தவிக்கும் நேரத்தில், அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக உணவு, உடை ஆகியவற்றை வழங்கி அவர்கள் சொந்த காலில் நிற்கும் வரை அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை தங்க வைத்து உதவிகளை செய்யலாம். 18 வயது முதல் 55 வயது வரையுள்ள பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். பெண்கள் பாதுகாப்பு இல்லத்தை தொண்டு நிறுவனங்கள் அல்லது அரசின் அமைப்புகள் கூட நிர்வகிக்கலாம். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் சகோதரி என்ற அமைப்பு, பெண்களுக்கான இல்லத்தை நிர்வகித்து வருகிறது.
இதற்கிடையே இந்த திட்டத்தினை கண்காணிக்கவும், செயல்படுத்தவும் புதுச்சேரி அரசு மாநில, மாவட்ட அளவில் கமிட்டி அமைத்துள்ளது. மாநில அளவிலான கமிட்டி சமூக நல செயலர் தலைமையில் சட்டத்துறை செயலர், டிஜிபி உள்ளிட்ட 6 பேரை கொண்டு செயல்படும். அதேபோல்  மாவட்ட அளவிலான கமிட்டியில் மாவட்ட ஆட்சியர் , காவல்துறை எஸ்பி, சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலர், நகராட்சி கமிஷனர் உள்பட 9 பேர்  இடம்பெற்றுள்ளனர்.  இந்த கமிட்டியின் ஆலோசனை அடிப்படையில் புதிய திட்டங்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அனைத்து உதவிகளும் ஒரே குடையின் கீழ் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த கமிட்டி ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை கூடி, நடைமுறையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க  வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி நான்கு பிராந்தியங்களாக பிரிந்து கிடப்பதால், மாகே, ஏனாம், காரைக்கால் பகுதிகளிலும் இது போன்ற பெண்கள் பாதுகாப்பு இல்லத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே இந்த இல்லத்தை நடத்த முன்வருபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுள்ளது. மேலும் ஏற்கனவே வகுக்கப்பட்ட விதிகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, இல்லத்தை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்படும் என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா தெரிவித்துள்ளார்.

Tags : Women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...