×

கடலூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் முடிவு அறிவிப்பதில் தாமதம் வேட்பாளர்கள் ஆவேசம்

கடலூர், ஜன. 3:  கடலூர் ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டதால் ஆவேசமடைந்த வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை 14 மையங்களில் நேற்று தொடங்கியது. கடலூர் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டது. 4 மாவட்ட கவுன்சிலர், 33 ஒன்றிய கவுன்சிலர், 51 பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு குளறுபடிகள் காரணமாக மூன்று மணி நேரம் தாமதமாக 11.45 மணிக்கு சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை அறைகளுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணிக்கை பணி துவங்கப்பட்டது. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்டு மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 6.45 மணிவரை அறிவிப்பு ஏதும் செய்யாமல் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழும் வழங்கப்படாமல் காலம் கடத்தப்பட்டது.

இது குறித்து சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு பணிக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் மையத்தில் நேரடி பார்வையாளராக இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் ஆகியோரிடமும் வேட்பாளர்கள் முறையிட்டனர். ஆனால் முறையிட்டும் பலன் இல்லாமல் அறிவிப்பு வெளியிட காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மத்தியில் பரபரப்பு உண்டானது. வெற்றி பெற்றோருக்கான அறிவிப்பு வெளியிடாமல் இருந்த நிலையில் மாலை 6.45 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அருளரசனை அவரது கண்காணிப்பு அறையில் வேட்பாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தென்னம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற பாலு ராஜேஸ்வரி மற்றும் அவரது முகவர் திமுக விவசாய அணி துணை தலைவர் மகேஷ் சான்றிதழ் வழங்குவதில் காலம் கடத்தப்படுவது ஏன்?. திட்டமிட்டு வெற்றி வேட்பாளர்களை மாற்ற திட்டமிடப்படுகிறதா என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வெற்றி பெற்ற அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் மதிவாணன், ராமசாமி, கலைவாணி, புவனேஸ்வரி, பிரேமலதா உள்ளிட்ட பலரும் தங்களது சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 இதை தொடர்ந்து வெற்றி வேட்பாளர்களின் போராட்டத்தையடுத்து சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : delay ,polling station ,Cuddalore ,
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...