×

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் மாலை 5 மணிக்கு முடிந்த முதல் சுற்று

வடலூர், ஜன. 3: குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில், மாலை 5 மணிக்கு முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்டதால், வாக்காளர்கள், முகவர்கள் அதிருப்தி அடைந்தனர். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய தேர்தலில் பதிவான வாக்குகள் குறிஞ்சிப்பாடி எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. தாமதமாக காலை 10 மணி அளவில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டது. இதனை ஆட்சியர் அன்புச்செல்வன் மேற்பார்வையிட்டார். தொடர்ந்து காலை 11 மணியளவில் ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தொடர்ந்து படிப்படியாக ஊராட்சி உறுப்பினர், தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என வாக்குகள் எண்ணப்பட்டது. ஆனால் மாலை நான்கு மணி வரை முதல் சுற்று எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
மாலை 5 மணி அளவில் வானாதிராயபுரம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களின் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இந்திராநகர், பெருமத்தூர், வடக்கு மேலூர் ஆகிய ஊராட்சிகளில் எண்ணப்பட்ட வாக்குகளின் அறிவிப்பும் அறிவிக்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

முதல் சுற்றில் பெருமத்தூர், இந்திரா நகர், வடக்கு மேலூர், வானாதிராயபுரம், வடக்குத்து, கீழூர், கொளக்குடி ஆகிய 7 ஊராட்சியில் நடந்து முடிந்த வாக்குகள் எண்ணப்படுவதற்கு ஒரு நாள் முழுவதும் எடுத்துக்கொண்டவர்கள், மீதமுள்ள 46 ஊராட்சிகளின் வாக்குகள் எப்போது எண்ணி முடிக்கப்படும் என வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.முதல் சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகள் குறித்து மாலை 5 மணி அளவில் வார்டு உறுப்பினர் வெற்றிக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிட்டனர். இதில் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாததால், வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர் வேட்பாளர்கள் பல மணி நேரமாக அறிவிப்புக்காக தரையில் அமர்ந்து காத்திருந்தனர்.இந்நிலையில், குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஊராட்சி வாக்குகள் எண்ணப்படும் மையத்திற்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. மேலும் மதியம் வழங்கப்பட்ட உணவும் சரிவர கொடுக்கப்படாததால் வாக்கு எண்ணும் ஊழியர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது.

Tags : round ,Kurinjipadi Panchayat Union ,
× RELATED ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி...