×

மந்த நிலையில் நடந்த வாக்கு எண்ணிக்கை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்

கடலூர், ஜன. 3:கடலூர் மாவட்டத்தில், அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை  காலதாமதமாக தொடங்கியதை தொடர்ந்து தேர்தல் முடிவுகளும் காலதாமதமாகவே  தெரியவரும் என கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6,053 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 9ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. வேட்புமனு தாக்கல் நிறைவின்போது மொத்தம் 20,520 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.இதில் 5,040 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 14,256 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில், 786 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 683 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 3,902 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்ததில், 29 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். 287 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடத்திற்கு 2,121 பேர் வேட்புமனுதாக்கல் செய்ததில், ஒருவர் போட்டியின்றி தேர்வானார். 29 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 242 பேர் போட்டியிட்டனர்.
முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 27ம் தேதி கடலூர், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல்புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்றது. மொத்தமுள்ள 8,42,128 வாக்காளர்களில், 6,71,033 பேர் வாக்களித்தனர். இது, 79.68 சதவீதமாகும்.

இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதி அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், முஷ்ணம், விருத்தாசலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 5,98,035 வாக்காளர்களில், 4,83,765 பேர் வாக்களித்தனர். இது, 80.89 சதவீதமாகும்.
வாக்குப்பதிவிற்கு பின்னர் பதிவான வாக்குகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஊராட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டன.இதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. கடலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட கவுன்சிலர், 33 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 51 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடந்தது. இதில் வேட்பாளர்களின் முகவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசன் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட்டனர்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் வார்டுகள் வாரியாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதையொட்டி டிஎஸ்பி சாந்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தில் உள்ள 14 வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஆட்சியர் அன்புச்செல்வன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு மையத்தில் இருந்தபடி ஆய்வு செய்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் நேரடியாக சென்று பார்வையிட்டார். வாக்கு எண்ணிக்கை நடந்த பெரியார் அரசு கலைக்கல்லூரி முன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் திரண்டிருந்ததால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

விருத்தாசலம்: விருத்தாசலம் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 9 பேரும், 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 89 பேரும், 51 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 176 பேரும், 363 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 908 பேரும் போட்டியிட்டனர். 13 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 192 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் காலை 7 மணிக்கு கல்லூரி வளாகத்துக்குள் வந்து சேர்ந்தனர். தொடர்ந்து அவரவர் அடையாள அட்டைகளை காண்பித்து கல்லூரிக்குள் நுழைந்தனர். 9 மணியளவில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால் 10 மணியாகியும் மற்ற வாக்குப்பெட்டிகள் எதுவும் திறக்கப்படவில்லை.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் எந்தவித பதிலும் தர மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர்கள், முகவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விருத்தாசலம் டிஎஸ்பி இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இன்னும் சிறிது நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என கூறியதன் பேரில் அவர்கள் சமாதானம் அடைந்தனர்.வாக்கு எண்ணும் பகுதியில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி கிடையாது என ஒட்டுமொத்தமாக அனைவரையும் வெளியே அனுப்பியதால் பத்திரிகையாளர்களும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பத்திரிகையாளர்களுக்கு அனுமதி உண்டா இல்லையா என்பது கூட தெரியாத நிலையில் தேர்தல் அதிகாரி குழம்பிப்போய் ஒரு முறை அனுமதி உண்டு என்றும், ஒரு முறை அனுமதி இல்லை என்றும் கூறி அவர்களை அலைக்கழித்ததால் பத்திரிகையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிதம்பரம்: சிதம்பரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 4 இடங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும்பாலான இடங்களில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் வாக்கு எண்ணிக்கை காலதாமதமாக துவங்கியது. கீரப்பாளையம் ஒன்றிய வாக்குகள் எண்ணப்படும் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு மையத்தில் 45 நிமிடத்துக்கு பிறகே வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பதிவான வாக்குகள் தரம் பிரிப்பதற்கு 1.30 மணி நேரம் ஆனது. இதனால் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாததால் ஆயிரக்கணக்கானோர் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதேபோல் பரங்கிப்பேட்டை ஒன்றிய வாக்கு எண்ணப்பட்ட சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மையத்துக்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரிவித்ததை தொடர்ந்து காலதாமதமாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை காலதாமதமாக தொடங்கியதை தொடர்ந்து தேர்தல் முடிவுகளும் காலதாமதமாகவே தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.

Tags : release ,recession ,
× RELATED சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு