×

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் குவிந்ததால் பரபரப்பு

பொள்ளாச்சி, ஜன. 3: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட மூன்று ஒன்றியங்களில், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர், ஒன்றியக்குழு கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த டிச. 27ம் தேதி மொத்தம் 431 வாக்குச்சாவடிகளில் நடந்தது. இதைதொடர்ந்து நேற்று, உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை பல்லடம் ரோட்டில் உள்ள பி.ஏ.கல்லூரியிலும். தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை பாலக்காடு ரோட்டில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்.  ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை வேட்டைக்காரன் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையங்களில் நடைபெற்றது.

இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில், வைக்கப்பட்டிருந்த வாக்கு பெட்டிகள் நேற்று காலை 8 மணியளவில் திறக்கப்பட்டது. மேலும் முகவர்கள் முன்னிலையில் செல்லும் வாக்கு, செல்லா வாக்கு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு தனித்தனி அறையில் சின்னம் பொறிக்கப்பட்ட பெட்டிகளில் போடப்பட்டன. அதன்பின் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. வாக்கு எண்ணிக்கையின்போது, மைத்திற்குள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பலத்த சோதனைக்கு பிறகே  போலீசார் அனுமதித்தனர். ஆனால் மதிய நேரத்தில் சிலர் அடையாள அட்டை இல்லாமல் பாலக்காடு ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளிக்குள் புகுந்தனர்.

இதையடுத்து போலீசார் சோதனையின்போது அவர்களிடம் அடையாள அட்டை இல்லாதது தெரியவந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த நபர்களை எச்சரித்து வெளியே அனுப்பினர். இச்சம்பவத்தால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முடிவுகள் அறிவிக்க தாமதம்
பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில், காலை 8மணி  முதல் ஒவ்வொரு சுற்றுக்கும் 5ஊராட்சிகள் வாரியாக வாக்குபெட்டிகள் எடுக்கப்பட்டு,  வாக்குச்சீட்டுகள் எண்ணும் பணி நடைபெற்றது. ஆனால், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதும். அதனை முறையாக அறிவிக்காமல் இழுத்தடிக்கப்பட்டது. பகல் 12 மணியளவில் முதல் சுற்றில், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களே அறிவிக்கப்பட்டன.

ஆனால், கட்சி சின்னத்துடன் போட்டியிட்ட மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக்குழு உறுப்பினர் முன்னிலை நிலவரம் குறித்து அறிவிப்பு வெளியிடாமல் தாமதம் செய்தனர். மேலும், ஒவ்வொரு சுற்றிலும் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்வு முடிவுகள், பல மணிநேரத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டதது. இதனால் தேர்தல் முடிவை எதிர்பார்த்து மையத்திற்கு வெளியே காத்திருந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : supporters ,polling center ,
× RELATED நெல்லை பாஜக வேட்பாளர் நயினார்...